1,000 பிராங்க் வருடாந்திர ரயில் பாஸ்: சுவிட்சர்லாந்தில் ஆதரவும் எதிர்ப்பும்
பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துவதை ஊக்குவிக்க மலிவு விலை ரயில் பாஸ் வழங்கவேண்டும் என்ற எண்ணம் நீண்ட காலமாகவே சுவிட்சர்லாந்தில் நிலவிவருகிறது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் பெடரல் தேர்தல் நெருங்கி வருவதாலும், சுவிஸ் ரயில் கட்டண உயர்வு 2023ஆம் ஆண்டின் இறுதியில் அமுலுக்கு வர உள்ளதாலும், இந்த விடயம் மீண்டும் அரசியல் ரீதியில் கவனம் ஈர்க்கத் துவங்கியுள்ளது.
1,000 பிராங்க் வருடாந்திர ரயில் பாஸ்
குறிப்பாக Vaud and Neuchâtel மாகாணங்களின் சோஷியலிஸ்ட், கிரீன் மற்றும் சாலிடாரிட்டிஸ் கட்சிகளின் உறுப்பினர்கள், வரிகளின் மூலம் நிதியுதவி செய்யப்படும் 1,000 சுவிஸ் ஃப்ராங்க் விலையுடைய வருடாந்திர ரயில் பாஸ் பற்றிய திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளனர்.
இந்த திட்டம் மாகாண நாடாளுமன்றங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், பெடரல் மட்டத்திலும் அதற்கான முயற்சிகளைத் துவக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பும் நிலவுகிறது
என்றாலும், PLR/FDP போன்ற கட்சிகள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சுவிஸ் பொதுப்போக்குவரத்துக்கான உள்கட்டமைப்பு முதலீடு ஏற்கனவே குறைவாக உள்ளது என்று கூறும் அவர்கள், டிக்கெட் விலைகளைக் குறைப்பதன் மூலம் வருவாயைக் குறைப்பதால் பராமரிப்பு மற்றும் நெட்வொர்க் விரிவாக்கத்திற்கான முதலீட்டிற்காக வழங்கப்படும் தொகை மேலும் குறைய அது வழிவகை செய்யும் என்கிறார்கள்.
அத்துடன், மலிவு விலையுடைய பாஸ் வழங்குவதற்காக வரிகள் மூலம் பெற்ற பணத்தைப் பயன்படுத்துவது, வரிச்சுமையை அதிகரிப்பதுடன், போக்குவரத்துத் துறைக்கும் கூடுதல் சுமையை உருவாக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |