பிரான்ஸில் மூடப்பட்ட 1,800க்கும் மேற்பட்ட பள்ளிகள்: 2,00,000 பேர் வீதிகளில் இறங்கி போராட்டம்
மாணவர்களின் பெரும் போராட்டம் காரணமாக பிரான்ஸில் பெரும்பாலான பள்ளிகள் முடக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் பள்ளிகளில் வெடித்த போராட்டம்
கடந்த செப்டம்பர் 17ம் திகதி கிரெட்டீல்(Creteil) பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்களும் ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்தனர்.
பின்னர் தென்கிழக்கு புறநகர் பகுதியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வகுப்பு புறக்கணிப்பு மற்றும் பள்ளிகளை மறித்தல் போன்ற உள்ளூர் போராட்டங்களாக மாறியது.
குறுகிய கால இடைவெளிக்குள் இந்த போராட்டங்கள் காட்டுத்தீ போல பரவி, வலுப்பெற்று பின்னர் ஒருங்கிணைந்த தேசிய அளவு போராட்டமாக மாறியது.
மேலும், ஒரு வகுப்பில் அதிகப்படியான மாணவர்கள் இருப்பது, நீண்ட நேர பாடவேளைகள் ஆகியவையும் போராட்டங்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

மூடப்பட்ட பள்ளிகள்
தொழிலாளர் சங்கங்களின் ஆதரவு மற்றும் உயர் கல்வி மாணவர்களின் பங்கேற்புடன் தேசிய அளவில் இந்த போராட்டத்தில் பங்கேற்க பெரும் திரளான மக்கள் கூடி வருகின்றனர்.
இன்று போராட்டத்தில் கலந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கை 1,50,000 முதல் 2,00,000 வரை இருக்கக்கூடும் என்று அமைப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பிரான்ஸின் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சங்கம் அளித்த தகவல் படி, நாடு முழுவதும் உள்ள 1,800க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டோ அல்லது முடக்கப்பட்டோ ஸ்தம்பித்து போய் இருப்பதாக கூறப்படுகிறது.