விதிகளை மீறி பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ள ஜேர்மன் பெட்ரோல் நிலையங்கள்
ஜேர்மனியில், ஐந்தில் ஒரு ஜேர்மன் பெட்ரோல் நிலையம், விதிகளை மீறி பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.
12 மணி விதி
ஜேர்மனியில், ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட்ட ’12 மணி விதி' என்னும் விதியின்படி, ஒரு நாளுக்கு ஒரு முறை, அதுவும் சரியாக, மதியம் 12.00 மணிக்கு பெட்ரோல் நிலையங்கள் பெட்ரோல் விலையை உயர்த்தலாம் என விதி உள்ளது.
அதாவது, அந்த நேரத்தில்தான் விலையை உயர்த்தவேண்டும், அதுவும் ஒரு முறைதான் உயர்த்தவேண்டும்.

அப்போதுதான், வாடிக்கையாளர்கள் இந்த நேரத்தில் பெட்ரோல் விலை இவ்வளவாக இருக்கலாம் என எதிர்பார்த்து பெட்ரோல் நிரப்ப வரமுடியும்.
ஆக, திடீர் விலை உயர்வுகள், அதீத விலை உயர்வு போன்ற விடயங்கள் பொதுமக்களை பாதிக்காமல் இருப்பதற்காக இந்த விதி கொண்டுவரப்பட்டது.
ஆனால், ஜேர்மனியில் உள்ள 15,240 பெட்ரோல் நிலையங்களில் 2,995 நிலையங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் 17,000 முறை பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில் மட்டுமே, 25.6 சதவிகித பெட்ரோல் நிலையங்கள் விதிகளை மீறியுள்ளன.
மொத்தமாக ஜேர்மனியில் என்று பார்க்கும்போது, 19.7 சதவிகித பெட்ரோல் நிலையங்கள், அதாவது, ஐந்தில் ஒரு பெட்ரோல் நிலையம் விதிகளை மீறியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |