எதிர்காலம் குறித்த கவலையில் வியாபாரிகள்: ஜேர்மன் ஆய்வு முடிவுகள்
ஜேர்மனியில், வர்த்தக நிறுவனங்கள் பல எதிர்காலம் குறித்த கவலையில் இருப்பதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
எதிர்காலம் குறித்த கவலையில் வியாபாரிகள்
ஜேர்மன் நிறுவனங்களில் 12இல் ஒன்று, சில்லறை வியாபரிகளைப் பொருத்தவரையிலோ ஆறில் ஒருவர், தங்கள் எதிர்காலம் குறித்து கவலைப்படுவதாக ஜேர்மனியின் மியூனிக் நகரை மையமாகக் கொண்டு செயல்படும் ifo என்னும் ஆய்வமைப்பு தெரிவித்துள்ளது.

ஆய்வின் முடிவுகள், 8.1 சதவிகித ஜேர்மன் நிறுவனங்கள் தங்கள் இருப்புக்கு ஆபத்து இருப்பதாக நம்புவதாக தெரிவித்துள்ளன.
சில்லறை வர்த்தகத்தைப் பொருத்தவரையிலோ, 17.4 சதவிகிதத்தினர் தங்கள் இருப்புக்கு ஆபத்து இருப்பதாக நம்புவதாக தெரிவிக்கிறது அந்த ஆய்வு.
ஆய்வை தலைமையேற்று நடத்திய Klaus Wohlrabe என்பவர் கூறும்போது, பொருளாதார நிலைமை தொடர்ந்து பதற்றமாகவே உள்ளது என்கிறார்.

புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, வரும் மாதங்களில் திவால் நிலையை அடையும் நிறுவனங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் அதிக அளவில் நீடிக்க வாய்ப்புள்ளது என்கிறார் அவர்.
ஒரு பக்கம் வாடிக்கையாளர்கள் செலவு செய்யத் தயக்கம் காட்டுவதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ள அதே நேரத்தில், வளர்ந்து வரும் இணையவழி வர்த்தகமும், மலிவான வெளிநாட்டுத் தள்ளுபடி விற்பனையாளர்களும், ஷாப்பிங்கிற்காகப் பணம் செலவழிக்கத் தயாராக இருப்பவர்களை ஈர்ப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மொத்தத்தில், மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் என அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும், 11.6% நிறுவனங்களுக்கு, தாங்கள் தொழிலை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுவோமோ என்ற கவலை உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |