டெஸ்ட் வரலாற்றில் 1 ரன்னில் த்ரில் வெற்றிகள்: மிகச்சிறிய வித்தியாசத்தில் முடிந்த டாப் 10 போட்டிகள்
டெஸ்ட் கிரிக்கெட்டில் 1 ரன் முதல் குறைந்த ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போட்டிகள் குறித்து பார்ப்போம்.
1.மேற்கிந்திய தீவுகள் - அவுஸ்திரேலியா (1 ரன் வித்தியாசம்)
1993ஆம் ஆண்டில் அடிலெய்டில் நடந்த பரபரப்பான டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 1 ரன் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது.
வெற்றி இலக்கை நோக்கி ஆடிய அவுஸ்திரேலிய அணி 184 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இப்போட்டி கிளாசிக் போட்டியாக பார்க்கப்படுகிறது.
2.நியூசிலாந்து - இங்கிலாந்து (1 ரன் வித்தியாசம்)
2023ஆம் ஆண்டில் வெல்லிங்டனில் நடந்த டெஸ்டில், நியூசிலாந்து அணி 1 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இதன்மூலம் இந்த சாதனையைப் படைத்த இரண்டாவது அணி என்ற பெருமையைப் பெற்றது. இங்கிலாந்து அணி 257 ஓட்டங்களை எட்டமுடியாமல் ஆல்அவுட் ஆனது.
3.இங்கிலாந்து - அவுஸ்திரேலியா ஆஷஸ் தொடர்
2005யில் நடந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகள் மோதின. அவுஸ்திரேலிய அணி வெற்றி இலக்கை எட்ட முடியாமல் 279 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இதன்மூலம் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. ஆன்ட்ரூ ஃபிளிண்டப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
4.அவுஸ்திரேலியா - இங்கிலாந்து (மான்செஸ்டர்)
1902யில் நடந்த டெஸ்டில் அவுஸ்திரேலியா 299 ஓட்டங்களும், இங்கிலாந்து 262 ஓட்டங்களும் முதல் இன்னிங்ஸில் எடுத்தன.
பின்னர் அவுஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸில் 86 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, இங்கிலாந்துக்கு 124 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், ட்ரம்ப்ள் (6 விக்கெட்டுகள்) மற்றும் சாண்டர்ஸ் (4 விக்கெட்டுகள்) ஆகியோரின் மிரட்டலான பந்துவீச்சில் இங்கிலாந்து 120 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆகி, 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
5.இங்கிலாந்து - அவுஸ்திரேலியா (பாக்சிங் டே டெஸ்ட்)
1982ஆம் ஆண்டில் மெல்போர்னில் நடந்த டெஸ்டில் அவுஸ்திரேலியாவுக்கு 292 ஓட்டங்கள் வெற்றி இலக்கை இங்கிலாந்து நிர்ணயித்தது.
வெற்றியை நெருங்கிய அவுஸ்திரேலியா நோர்மன் கோவான்ஸ் பந்துவீச்சில் 288 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, இங்கிலாந்து 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
6.நியூசிலாந்து - பாகிஸ்தான் (அபுதாபி)
2018யில் அபுதாபியில் நடந்த டெஸ்டில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. பரபரப்பான இந்த டெஸ்டில் பாகிஸ்தான் அணிக்கு 176 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், அஜாஸ் பட்டேல் பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்த பாகிஸ்தான் 171 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இதன்மூலம் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது. இது அந்த அணியின் சிறந்த டெஸ்ட் வெற்றியாகும்.
7.தென் ஆப்பிரிக்கா - அவுஸ்திரேலியா (1994)
சிட்னியில் 1994ஆம் ஆண்டில் நடந்த டெஸ்டில் அவுஸ்திரேலியாவை எதிர்கொண்டது தென் ஆப்பிரிக்கா.
117 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை நோக்கிய ஆடிய அவுஸ்திரேலியா, ஃபேனி டி வில்லியர்ஸ் மற்றும் ஆலன் டொனால்ட் ஆகியோரின் தாக்குதல் பந்துவீச்சில் 111 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதனால் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா சரித்திர வெற்றி பெற்றது. இதுவும் ஒரு கிளாஸிக் டெஸ்ட்டாக பார்க்கப்படுகிறது.
8.அவுஸ்திரேலியா - இங்கிலாந்து (சிட்னி, 1885)
1885ஆம் ஆண்டில் சிட்னியில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்தை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வீழ்த்தியது.
அவுஸ்திரேலியா தனது 19வது டெஸ்டில் இந்த வெற்றியை பெற்றது. ஆரம்ப காலகட்டத்தில் மிக நெருக்கமான வெற்றியாக இது பதிவானது.
9.இந்தியா - இங்கிலாந்து (ஓவல், 2025)
இந்திய கிரிக்கெட் அணி செய்துள்ள சம்பவம்தான் இந்த பதிவிற்கே முக்கிய காரணம் என்று கூறலாம். லண்டன் ஓவலில் நடந்த டெஸ்டில் இந்திய அணி 374 ஓட்டங்கள் என்ற வலுவான இலக்கைத்தான் இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது.
ஆனால், இங்கிலாந்து அதிரடி ஆட்டத்தினால் 4வது நாளிலேயே கிட்டத்தட்ட இலக்கை நெருங்கியது. கடைசி நாளில் 35 ஓட்டங்களே தேவை என்ற நிலையில், யாரும் எதிர்பாரா விதமாக முகமது சிராஜ் புயல்வேகத்தில் தாக்கினார்.
இதன்மூலம் இந்திய அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்று சரித்திரம் படைத்தது.
10.அவுஸ்திரேலியா - இங்கிலாந்து (1882, ஓவல்)
ஓவலில் 1882யில் நடந்த ஆஷஸ் டெஸ்டில், அவுஸ்திரேலியா 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது.
இதுதான் ஆஷஸின் மூலக்கதை ஆகும். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் நாடக ரசிகர்களுக்கு ஒரு காலத்தால் அழியாத போட்டியாகவும் இது பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |