ஒருபோதும் அலட்சியப்படுத்தக்கூடாத 10 அறிகுறிகள்.., மருத்துவரின் கூற்று
உடலில் உள்ள உறுப்புகளின் செயல்பாட்டில் ஏற்படும் பாதிப்புகளை சில அறிகுறிகள் மூலம் உடல் வெளிப்படுத்தும்.
எனவே, தொடர்ந்து ஏற்படும் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வது அவசியம்.
அந்தவகையில், எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற கலிபோர்னியாவைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடல் மருத்துவ நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, ஒருபோதும் அலட்சியப்படுத்தக்கூடாத 10 அறிகுறிகளைப் பட்டியலிட்டுள்ளார்.
இந்த அறிகுறிகள் தொடர்ந்து அல்லது அடிக்கடி ஏற்பட்டால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

என்னென்ன அறிகுறிகள்?
1. தொடர்ந்து ஐஸ்க்ரீம் சாப்பிடத் தோன்றுவது- அடிக்கடி ஐஸ்க்ரீம் சாப்பிடத் தோன்றுவது இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.
2. உள்நோக்கி வளைந்த நகங்கள்- நகங்கள் உள்நோக்கி வளைந்திருப்பது இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.
3. இரவில் கால் குடைச்சல்- இரவில் தூங்கும்போது அடிக்கடி கால் குடைச்சல் ஏற்படுவது இரும்புச்சத்து குறைபாட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
4. கழுத்து, அக்குள் கருமை- கழுத்து மற்றும் அக்குள் பகுதிகளில் சருமம் கருமையாகவும், மென்மையாகவும் மினுமினுப்பாகவும் மாறினால், அது இன்சுலின் எதிர்ப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
5. கை, கால்களில் கூச்ச உணர்வு- கைகள் அல்லது கால்களில் தொடர்ந்து கூச்ச உணர்வு ஏற்படுவதற்கு வைட்டமின் பி12 குறைபாடு ஒரு காரணமாக இருக்கலாம்.
6. வாய்ப்புண் மற்றும் சிவந்த நாக்கு- நாக்கில் தொடர்ந்து புண் ஏற்படுவதும், நாக்கு சிவப்பாக இருப்பதும் இரும்புச்சத்து, வைட்டமின் பி12 அல்லது ஃபோலேட் குறைபாடாக இருக்கலாம்.
7. துர்நாற்றமிக்க மலம்- மலம் மிகவும் பிசுபிசுப்பாகவும், அதிக துர்நாற்றத்துடனும் இருப்பதுடன், வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டால், உடலில் கொழுப்பை சரியாக உறிஞ்சுவதில் பிரச்சனை இருக்கலாம்.
8. உணவை விழுங்குவதில் சிரமம்- உணவை விழுங்கும்போது அடிக்கடி சிரமம் ஏற்படுவது புறக்கணிக்கக் கூடாத அறிகுறியாகும்.
9. கண்கள் மஞ்சளாக மாறுவது- கண்கள் மஞ்சள் நிறமாக மாறுவதுடன், சிறுநீரும் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது மஞ்சள் காமாலையின் அறிகுறியாக இருக்கலாம்.
10. கருப்பு நிற மலம்- கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுவது செரிமானப் பாதையில் ரத்தப்போக்கு இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |