பிரித்தானியாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற 10 ஆண்டுகள் போராடும் கடினமான வழிமுறை: ஒரு திடுக் செய்தி
பிரித்தானியாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற 10 ஆண்டுகள் போராடும் கடினமான வழிமுறைகுறித்து அறிந்திருக்கிறீர்களா?
படிக்கவே கொடுமையாக இருக்கிறது அந்த செய்தியை...
வேண்டுமென்றே அறிமுகம் செய்யப்ப்பட்ட கொடுமையான வழிமுறை
2012ஆம் ஆண்டு, அப்போதைய உள்துறைச் செயலராக இருந்த தெரஸா மேயால் அறிமுகம் செய்யப்பட்டது, பிரித்தானியாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறும் 10 ஆண்டுகள் காத்திருக்கும் வழிமுறை.
அதாவது, பிரித்தானியாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற விரும்பும் வெளிநாட்டவர்கள், 10 ஆண்டுகள் பிரித்தானியாவில் சட்டப்படி, முறைப்படி தங்கியிருக்கவேண்டும்.
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காகவே தெரஸா மேயால் அறிமுகம் செய்யப்பட்ட கொடுமையான ஒரு திட்டம் இது.
ஆனால், அந்த முறையைத் தேர்ந்தெடுத்தவர்களில் பாதிப்பேர், உணவுக்கும், கட்டணங்கள் செலுத்துவதற்கும் போராடி வருவது ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 62 சதவிகிதம்பேர் வீட்டை வெப்பப்படுத்துதல், மின்சாரம், தண்ணீர் மற்றும் இன்டர்நெட்டுக்கு கட்டணம் செலுத்தவும், 57 சதவிகிதம்பேர் உணவு வாங்கவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.
கணக்கிடப்பட்ட 170,000 பேரில், பலர் குறைந்த வருவாய் கொண்ட வயதானவர்களைக் கவனித்துக்கொள்ளும் மருத்துவ உதவியாளர்களாகவும், வீடுகளை சுத்தம் செய்பவர்களாகவும், செவிலியர் உதவியாளர்களாகவும் பணி செய்கிறார்கள்.
இத்திட்டம், பலருக்கு வறுமையையும், பாதுகாப்பின்மையையும் உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் 10 ஆண்டுகள் தொடர்ந்து சட்டப்படி பிரித்தானியாவில் வாழவேண்டும், 30 மாதங்களுக்கொருமுறை விசாக்களை புதுப்பிக்க ஈண்டும் மீண்டும் விண்ணப்பிக்கவேண்டும்.
அவர்கள் அரசின் உதவியைப் பெறக்கூடாது. அவர்களுடைய பிள்ளைகள் பள்ளிகளில் இலவச உணவு பெறக்கூடாது, அப்படி இரண்டரை ஆண்டுகளுக்கொருமுறை கட்டணம் செலுத்தமுடியாதவர்கள் ஆவணங்களற்றோராகவும், பின்னர் சட்டவிரோத புலம்பெயர்ந்தோராகவும் ஆகிவிடுவார்கள்.
தண்டிக்கும் கடினமான முறை
இது தண்டிக்கும் கடினமான ஒரு வழிமுறைபோல இருப்பதாக தெரிவிக்கிறார் மூத்த ஆய்வாளரான Lucy Mort.
பல ஆண்டுகளாக பிரித்தானியாவில் வாழும் இந்த மக்களுக்கு எளிதில் குடியமர உதவும் வழிமுறைகளை அறிமுகப்படுத்தவேண்டும் என கோருகிறார் புலம்பெயர்வோர் ஆதரவு அமைப்பு ஒன்றைச் சேர்ந்த Josephine Whitaker-Yilmaz.
ஆனால், இந்த விதிகள் ஒருவருடைய நிதி சுதந்திரம், அதாவது பணத்துக்காக யாரையும் நம்பியிருக்காமல் சொந்தக்காலில் நிற்பதை உறுதி செய்தல், மக்களோடு ஒருங்கிணைந்து வாழ்வதை ஊக்குவித்தல் மற்றும் புலம்பெயர்தல் மோசடிகளை தவிர்த்தல் போன்ற விடயங்களை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன என்கிறார் உள்துறைச் செயலக செய்தித்தொடர்பாளர் ஒருவர்.