2030-க்குள் இதை முடிவுக்கு கொண்டு வர...100-க்கு மேற்பட்ட நாடுகள் ஆதரவு: கிளாஸ்கோ மாநாட்டில் நடந்தது என்ன?
கிளாஸ்கோவில் நடைபெற்ற காலநிலை மாற்ற உச்சிமாநாட்டில் மழைக்காடுகளை பாதுகாக்கவும், காடுகள் அழிப்பை முடிவுக்கு கொண்டு வரவும் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் ஸ்காட்லாந்தில் உள்ள Glasgow-வில் பிரதமர் போரிஸ் ஜோன்சன், காலநிலை( COP26) மாற்ற உச்சி மாநாட்டில் உலகத்தலைவர்கள் அனைவரும் ஒன்றினைத்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த மாநாட்டை திறந்து வைத்து பேசிய அவர், புவி வெப்பமயமாதலை சமாளிக்கத் தவறினால், வருங்கால சந்ததியினர் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும். நாம் இப்போது இதில் செயல்பட தவறினால் பின்னர் நம்மை மன்னிக்காமாட்டார்கள்.
எனவே இந்த Glasgow மாநாடு ஒரு திருப்புமுனையாக அமைய வேண்டும். நாம் எவ்வளவு காலம் செயல்படத் தவறுகிறோமோ, அவ்வளவு மோசமாகவும், இறுதியில் பேரழிவால் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, அதற்கு நாம் கொடுக்கும் விலை மிகவும் அதிகமாக இருக்கும் என்று எச்சரித்தார்.
இந்த உச்சி மாநாட்டின் இரண்டாவது நாளில், உலகில் சுமார் 85 சதவீத காடுகளை உள்ளடக்கிய உலக தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் வரும் 2030-ஆண்டிற்குள் காடுகள் அழிப்பு மற்றும் நிலச்சீரழிவை நிறுத்தவும், அதை மாற்றுவதற்கும் உறுதியளித்துள்ளனர்.
பிரேசில், ரஷ்யா, இந்தோனேஷியா உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்தை ஆதரித்துள்ளன.
மேலும், காடுகளை அழிப்பது தொடர்பான நடவடிக்கைகளில் முதலீடு செய்து வரும் சுமார் 30-க்கும் மேற்பட்ட நிதிநிறுவனங்கள், இனி இதில் முதலீடு செய்வதை நிறுத்துவதாக உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.