100 வயதில் காதலியைக் கைப்பிடிக்கும் காதலர்: பிரான்சில் கோலாகலமாக நடக்கவிருக்கும் திருமணம்
இரண்டாம் உலகப்போரின்போது தான் பணியாற்றிய பிரான்சிலேயே தனது காதலியைக் கைப்பிடிக்க இருக்கிறார் அமெரிக்க முன்னாள் போர் வீரர் ஒருவர்.
100 வயதில் காதலியைக் கைப்பிடிக்கும் காதலர்
இரண்டாம் உலகப்போரில் பங்கேற்று வீர தீர செயல்கள் புரிந்தவரான ஹரால்ட் (Harold Terens), தனது 100ஆவது வயதில், 96 வயதாகும் தனது காதலியான ஜீனை (Jeanne Swerlin) அடுத்த மாதம், அதாவது, ஜூன் மாதம் 8ஆம் திகதி, பிரான்சில் வைத்து திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.
பிரான்சில் இந்த திருமணம் நடைபெற உள்ளதற்குக் காரணம், 1944ஆம் ஆண்டு, பிரான்சிலுள்ள நார்மண்டி போரில் பங்கேற்ற ஹரால்ட், ஜூன் மாதம் 6ஆம் திகதி, தனது வீரதீரச் செயல்களுக்காக நார்மண்டியில் கௌரவிக்கப்பட இருக்கிறார். அதைத் தொடர்ந்து ஹரால்ட், ஜீன் திருமணமும் அங்கேயே நடைபெற உள்ளது.
அதிர்ஷ்டசாலி
இரண்டு முறை செத்துப்பிழைத்த நான் அதிர்ஷ்டசாலி என்கிறார் ஹரால்ட். ஆம், உக்ரைனில், போரில் உயிர் பிழைத்த ஹரால்ட், கடுமையான வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளார். உள்ளூர் விவசாயி குடும்பம் ஒன்று அவரைக் காப்பாற்ற உயிருடன் இங்கிலாந்துக்கு திரும்பியுள்ளார்.
இங்கிலாந்தில், மதுபான விடுதி ஒன்றிற்குச் சென்ற ஹரால்டுக்கு அந்த மதுபான விடுதி உரிமையாளர் விடுதியை மூடும் நேரமாகிவிட்டதாகக் கூறி மதுபானம் கொடுக்க மறுக்க, கோபத்துடன் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் ஜேர்மன் ராக்கெட் ஒன்று அந்த மதுபான விடுதியைத் தாக்கி அழித்துவிட்டிருக்கிறது.
அடுத்த மாதம், பேரப்பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளின் பிள்ளைகளும் சூழ, தன் காதலியான ஜீனை கரம்பிடிக்க இருக்கிறார் ஹரால்ட்.
ஆம், ஹரால்டுக்கு இது இரண்டாவது திருமணம். ஏற்கனவே தெல்மா என்னும் பெண்ணைத் திருமணம் செய்திருந்தார் அவர். 70 ஆண்டுகள் தெல்மாவுடன் வாழ்ந்து மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான ஹரால்ட், தெல்மா இறந்தபின் தனிமையில் வாடும்போதுதான் ஜீனை சந்தித்துள்ளார். ஜீனும் கணவரை இழந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |