இன்னொரு பிறந்தநாள் கேக் கூட வெட்டத் தயார்: 108 வயதைத் தொட்ட முன்னாள் ராணுவ வீரர்
கனடா நாட்டில் 108 வயதைத் தொட்ட முன்னாள் ராணுவ வீரர் தனது குடும்பத்தோடு தனது பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார்.
கனடாவின் வயதான நபர்
கனடா நாட்டின் மிக வயதான நபர்களில் ஒருவரான ஆல்பர்ட் மிட்டில்டன்(Albert Middleton) தனது குடும்பம் மற்றும் நண்பர்களோடு அவரது 108வது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். மேளதாளத்தோடு பெரிய பட்டாளமே சூழ்ந்திருக்க கோலாகலமாகத் தனது பிறந்த நாள் விழா நடைபெற்றுள்ளது.
@cbc
ஆல்பர்ட்டிடம் அவரது வயதைப் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ”இதிலென்னயிருக்கிறது இன்னொரு பிறந்த நாள் கேக் கூட வெட்ட நான் தயார்” என புன்னகையுடன் கூறியிருக்கிறார்.
ராணுவ வீரர்
மிட்டில்டன் இங்கிலாந்து நாட்டில் 1915-ஆம் ஆண்டு பிறந்துள்ளார். தனது இளமைக் காலத்தில் கனடா நாட்டிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். முதலில் ஆப்பிள் பழத்தோட்டத்தில் வேலை செய்துள்ளார்.
1943 முதல் 1946 வரை இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் மிட்டில்டன் விமானப்படைக்குத் தன்னார்வத் தொண்டு செய்து வந்துள்ளார்.
@cbc
அதற்குப் பின்பு 26 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துள்ளார். மேலும் இவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.
”அவர் யாரைப் பற்றியும் இதுவரை குறை கூறியதேயில்லை, நீங்கள் எப்போதாவது சோகமாகியிருந்தால், அவரை உங்கள் பக்கத்தில் வைத்துக்கொள்ள விரும்புவீர்கள்" என்று அவரது மகள் வெயின் தனது தந்தையைப் பற்றி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.