இளவரசர் ஹரி- மேகன் தம்பதிகளிடம் ஓப்ரா வின்ஃப்ரே கேட்க மறந்த 10 முக்கிய கேள்விகள்
நூற்றாண்டின் மிகப்பெரிய நேர்காணலாகவும் பிரித்தானிய அரச குடும்பத்தினர் மீது வெறுப்பை உமிழ்ந்த சம்பவமாகவும் கருதப்படும் ஹரி- மேகன் தம்பதிகளிடம் ஓப்ரா வின்ஃப்ரே முன்னெடுத்த நிகழ்ச்சி தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்துவரும் ஹரி- மேகன் தம்பதிகளிடம் தொலைக்காட்சி ஆளுமை ஓப்ரா வின்ஃப்ரே அதிமுக்கியமான நேர்காணல் ஒன்றை முன்னெடுத்தார்.
குறித்த நேர்காணலில் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கு ஹரி- மேகன் தம்பதிகளின் வெளிப்படையான பதில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் ஓப்ரா வின்ஃப்ரே ஹரி- மேகன் தம்பதிகளிடம் கேட்க மறந்த 10 கேள்விகள் தொடர்பில் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.
தங்களது பிள்ளை ஆர்ச்சிக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்பதாலையே பிரித்தானியாவை விட்டு வெளியேறியதாக ஹரி- மேகன் தம்பதி கூறியுள்ளனர்.
ஆனால் அரச குடும்பத்து உறுப்பினராக இல்லாத நிலையில், பிரித்தானியாவில் சசிக்காதபோதும் இங்கிலாந்து மக்களின் வரிப்பணத்தில் ஏன் பாதுகாப்புக்காக பணம் செலவிட வேண்டும் என்ற கேள்வி கேட்கப்படவில்லை.
உண்மையில் அரச குடும்பத்தில் இளவரசர் ஹரி மூத்த உறுப்பினராக இருக்கும் மட்டும் அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்படும்.
மட்டுமின்றி தற்போது கலிபோர்னியாவில் ஹரி- மேகன் குடும்பத்தின் பாதுகாப்பு செலவுகளுக்காக இளவரசர் சார்லஸ் 2 மில்லியன் பவுண்டுகள் அளித்து வருகிறார்.
2-வதாக பிரித்தானியா அரச குடும்பத்தில் இருந்து நிதியுதவிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாலையே Netflix மற்றும் Spotify நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாக ஹரி தெரிவித்துள்ளார்.
உண்மையில் இளவரசர் ஹரியின் 21ம் வயது முதல் இளவரசி டயானாவின் சொத்துக்களில் இருந்து ஆண்டுக்கு 324,000 பவுண்டுகள் அளவுக்கு நிதியுதவி பெற்று வருகிறார்.
மட்டுமின்றி, ஹரியின் 30-வது வயதில் சுமார் 7.2மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு சொத்துக்களும் கையளிக்கப்பட்டுள்ளது.
அரச குடும்பத்து ஆடம்பரங்கள் ஏதும் தங்களுக்கு தேவை இல்லை என கூறியுள்ள மேகன், இளவரசர் ஹரி என அறியப்படுவதை விட வெறும் ஹரி என அறியப்படுவதே பெருமை என கூறியுள்ளார்.
உண்மையில் ஹரி என்ற பெயருடன் இளவரசர் என்ற பட்டம் இருப்பதாலையே Netflix நிறுவனம் 100மில்லியன் பவுண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
மட்டுமின்றி தங்கள் மகன் ஆர்ச்சி பெயரில் தொடங்கப்பட்டுள்ள அறக்கட்டளைக்கு அரச குடும்பத்து உறுப்பினர் என்ற காரணத்தாலையே சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரண்மனையில் தாம் வசித்து வந்தபோது, தமது கடவுச்சீட்டை கைப்பற்றி வைத்திருந்ததாகவும், ஒரு கைதி போலவே உணர்ந்ததாகவும் மேகன் கூறியுள்ளார்.
ஆனால் இதே காலகட்டத்தில் தான் மேகன் பல வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டதுடன், ஆடம்பர வாழ்க்கையும் வாழ்ந்துள்ளார்.
மேகன் கர்ப்பமாக இருந்த 2019-ல் நியூயார்க் நகருக்கு தனி விமானத்தில் சென்றிருந்தார். அதற்கான மொத்த செலவு 330,000 பவுண்டுகள் என கூறப்படுகிறது.
அரச குடும்பத்தின் தற்போதைய சட்டங்களின்படி ஹரியின் பிள்ளைகளுக்கு இளவரசர் பட்டம் அளிக்கப்படாது. அது மேகன் மெக்கலுக்கு உண்மையில் தெரியாதா என்ற கேள்வி கேட்காமல் விடப்பட்டுள்ளது.
ஓப்ரா உடனான நேர்காணலில், இனரீதியான பாகுபாடு காரணமாகவே தமது மகனுக்கு இளவரசர் பட்டம் மறுக்கப்பட்டதாக மேகன் கூறியுள்ளார்.
ஆனால் தொடக்கத்திலேயே தமது பிள்ளைகள் அரச குடும்பத்து உறுப்பினர்களாக ஒருபோதும் வளராது என்றே மேகன் கூறி வந்துள்ளார்.
சுற்றுச்சூழலுக்கு ஆதரவளித்துவரும் ஹரி- மேகன் தம்பதி, ஏன் அடிக்கடி தனிப்பட்ட விமான பயணங்களை அதிகமாக மேற்கொள்கின்றனர் என்ற கேள்வி கேட்கப்படவில்லை.
2019-ல் சுற்றுச்சுழலுக்கு ஆதரவான ஒரு இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை துவங்கிய ஹரி- மேகன் தம்பதி காலநிலை மாற்ற விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால் உண்மையில், ஹரி- மேகன் திருமணத்திற்கு பிறகு 10 வெளிநாட்டு பயணங்களில் 6 முறை தனி விமானத்தை பயன்படுத்தியுள்ளனர்.
பிரித்தானிய அரண்மனை வாசம் அளித்த நெருக்கடியால் சாகும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறும் மேகனிடம், அந்த காலகட்டத்தில் கணவர் ஹரி அல்லது தாயார் டோரியாவிடம் ஏன் உதவி கோரவில்லை என ஓப்ரா கேள்வி எழுப்பவில்லை.
இளவரசர் ஹரி தொடர்பிலோ பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பிலோ தாம் எந்த விசாரணையும் முன்னெடுக்கவில்லை என மேகன் கூறியுள்ளார்.
ஆனால் உண்மையில் டயானா இளவரசி போன்று இருக்க வேண்டும் என மேகன் மெர்க்கல் தமது ஆசையை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியானது.

