அப்பாகிட்ட காட்டுங்க.. பெற்றோர் ஒன்று சேர விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவன்!
சிக்கிய கடிதம் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் பிரிந்து வாழும் தனது பெற்றோர் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என, 12ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி ரவி-மேகலா. இவர்களது மகன் தருண் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.
குடும்ப பிரச்சனை காரணமாக ரவி மற்றும் மேகலா தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் தருண் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படும் நிலையில், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தனது பெற்றோர் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
அவர் கைப்பட எழுதிய கடிதத்தின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. அதில், 'இந்த கடிதத்தை அப்பாவிடம் வாசித்து காட்டுங்கள். அக்கா பாப்பாவை நல்லா பாத்துக்கோங்க, நல்லா படிக்க வைங்க. அப்பா போறேன் பா. எனக்கு நீங்க மூன்று பேரும் சேர்ந்து வாழ்ந்த போது அதுதான் எனக்கு சந்தோசம். அப்பா, அம்மாவை நீங்க கஷ்டப்படுத்தும்போது, நான் எப்படிப்பா உங்களுக்கு support-ஆ பேசுவேன். எனக்கு நீங்க ரெண்டு பேருமே முக்கியம். எனக்கு உங்க மேலயும் பாசம் இருக்கு அப்பா. அம்மா அப்பாவையும், அக்காவையும் நல்லா பாத்துக்கோங்க. அப்பா அம்மாவையும், அக்காவையும் நல்லா பாத்துக்கோங்க' என எழுதப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மாணவனின் சடலத்தை கைப்பற்றிய பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவர் எழுதிய கடிதத்தைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
12ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும் நிலையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.