122 பேர் உயிரிழந்த விவகாரம்.., போலே பாபா சாமியார் குற்றமற்றவர் என விசாரணை ஆணையம் அறிக்கை
ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் 122 பேர் உயிரிழந்த விவகாரத்தில் போலே பாபா சாமியார் குற்றமற்றவர் என விசாரணை ஆணையம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
போலே பாபா சாமியார் குற்றமற்றவர்
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் கடந்த ஆண்டு ஜூலை 2-ம் திகதி அன்று, போலே பாபா என்கிற சாமியார் ஆன்மீக சொற்பொழிவு நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கானோர் கூடினர். அப்போது, மத நிகழ்வு முடிந்ததும் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு 80 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக சுமார் 2.5 லட்சம் பேர் வரவழைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதித் துறை விசாரணைக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த சம்பவத்தை விசாரிக்க சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், ஆணையத்தின் அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அவையில் தாக்கல் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "ஆன்மீக நிகழ்ச்சியின் பாதுகாப்பு ஏற்பாட்டாளர்கள் சரியான முறையை கடைபிடிக்கவில்லை. இந்த சம்பவத்திற்கும் போலே பாபாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
ஏற்பாட்டாளர்களின் தவறான நிர்வாகமும், அனுமதிக்கப்பட்டதை விட அதிகப்படியாகச் சேர்ந்த கூட்டமும் தான் உயிரிழப்பிற்கு காரணம் ஆகும்.
காவல்துறை தரப்பில் பொறுப்பை முறையாக செய்யவில்லை. கூட்டத்தை நிர்வகிப்பதற்கு உறுதியான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |