தாய் மீது கல்லை போட்டு கொன்ற 14 வயது மகன்! தெரியவந்த காரணம்
சரியாக படிக்காததால் கண்டித்த தாயை கொலை செய்த 14 வயது மகன்
தப்பியோடிய சஞ்சயைப் பிடித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
தமிழக மாவட்டம் ஈரோட்டில் சரிவர படிக்காததைக் கண்டித்ததால் தாயின் தலையில் 14 வயது மகன் கல்லைப் போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சுங்கக்காரன் பாளையத்தைச் சேர்ந்தவர் அருள்செல்வன். இவர் தனது மனைவி யுவராணி, மகன் சஞ்சய் மற்றும் மகள் தர்ஷினி ஸ்ரீ ஆகியோருடன் வசித்து வந்தார்.
யுவராணி புஞ்சை புளியம்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். தனது மகன் சஞ்சய் சரிவர படிக்காததால் அவரை யுவராணி கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் பாடசாலை விடுதி ஒன்றில் சேர்த்துள்ளார். அதன் பின்னர் வீட்டிற்கு வந்த சஞ்சயை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அருள்செல்வன் வெளியே சென்றிருந்த சமயம், நள்ளிரவு வேளையில் தூங்கிக் கொண்டிருந்த தாய் யுவராணியின் தலையில் சஞ்சய் ஹாலோ பிளாக் கல்லைப்போட்டு விட்டு தப்பியோடியுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த யுவராணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் யுவராணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், சிறுவன் சஞ்சயை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.