கொழும்பில் பொலிஸார் அதிரடி: கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய 15 பேர் கைது
இலங்கையில் பொலிஸார் நடத்திய திடீர் சோதனையில் 15 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் பொலிஸார் அதிரடி
கொழும்பின் புறநகர் பகுதியான இரத்மலானை பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கையில் பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் உடன் தொடர்புடைய 15 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அதிரடி சோதனையை கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த நிலையில், 15 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5 வாள்கள் மற்றும் 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
முக்கிய குற்றவாளிகளுடன் தொடர்பு
தற்போது கைது செய்யப்பட்ட சில சந்தேக நபர்களுக்கு, வெளிநாட்டில் இருந்த படி சர்வதேச அளவில் பாதாள உலக செயல்களை இயக்கி வரும் அல்டோ தர்மா மற்றும் சாண்டோ ஆகியோருடன் தொடர்பு இருப்பதை அதிகாரிகள் ஆரம்பக்கட்ட விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.
இவர்கள் உள்ளூர் தரகர்கள் மூலம் செயல்பட்டு வந்ததாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அதே நேரத்தில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் குறித்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |