பனிச்சறுக்குக்காக பிரான்ஸ் வந்த 16 பிரித்தானிய இளைஞர்களுக்கு கொரோனா: உள்ளூர் மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு வந்துள்ள 26 பிரித்தானிய இளைஞர்களில் 16 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், உள்ளூர் மக்கள் அவர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சுவிட்சர்லாந்திலுள்ள Verbier என்ற கிராமத்தில் பனிச்சறுக்கு கற்பதற்காக அந்த 26 பேரும் ஆளுக்கு 8,900 பவுண்டுகள் செலுத்தி முறையாக விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால், பிரித்தானியாவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வர தடை விதிக்கப்பட்டுவிட்டதால், பனிச்சறுக்கு பயிற்சி அமைப்பாளர்கள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி அந்த இளைஞர்களை பிரான்சுக்கு அனுப்பிவிட்டார்கள்.
சுவிட்சர்லாந்துக்குப் போனால் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கும் என்பதால், அவர்கள் பிரான்ஸ் சுவிஸ் எல்லையிலிருக்கும் Vallorcine என்ற கிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
பிரித்தானியாவிலிருந்து புறப்பட்டபோது செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என்றாலும், கடந்த செவ்வாய்க்கிழமை அவர்களில் ஒரு இளைஞருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அடுத்த நாள் இன்னும் சிலர், வியாழக்கிழமை இன்னும் சிலர், என மொத்தம் 16 பேருக்கு கொரோனா பரவிவிட்டது.
ஏற்கனவே உலகமே புதிதாக திடீர்மாற்றம் பெற்ற பிரித்தானிய வகை கொரோனாவைக் குறித்து அச்சம் கொண்டிருப்பதால், அந்த இளைஞர்களிடமிருந்து எடுக்கப்பட்டுள்ள மாதிரிகள் பிரித்தானிய வகை கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை அறிவதற்காக Lyonக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அந்த முடிவுகள் வெளியாக 8 முதல் 10 நாட்கள் ஆகும். இந்நிலையில், பிரித்தானியாவிலிருந்து வந்த இளைஞர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ள விடயம், அவர்கள் தங்கியிருக்கும் பிரெஞ்சு கிராமத்துக்கு அருகிலுள்ள 400 பேர் வாழும் Chamonix என்ற பகுதி மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர்கள் பிரித்தானிய வகை கொரோனாவை கொண்டுவந்திருப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்துள்ளார்கள்.