கோலி, ரோகித், கில் மிரட்டல்., இலங்கை அணியை 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா!
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் பகல்-இரவு மோதலாக இன்று நடைபெற்றது.
இந்திய அணி
இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.
@himantabiswa/Twitter
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரகளாக சுப்மன் கில்லும், கேப்டன் ரோகித் சர்மாவும் இறங்கினர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 143 ஓட்டங்கள் சேர்த்திருந்த நிலையில் சுப்மன் கில் 70 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
இதையடுத்து விராட் கோலி களமிறங்கினர். தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்த கேப்டன் ரோகித் 83 ஓட்டங்களில் போல்ட் ஆனார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி தந்து 73-வது சதத்தை பதிவு செய்தார்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 373 ஓட்டங்கள் குவித்தது.
@himantabiswa/Twitter
கோலி, ரோகித், கில் மிரட்டல்
இந்திய அணி தரப்பில் கோலி 113 ஓட்டங்களும், ரோகித் 83 ஓட்டங்களும், கில் 70 ஓட்டங்களும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் ரஜிதா 3 விக்கெட்டும், மதுஷான்கா, கருணாரத்னே, ஷனகா, டிசில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி
இதையடுத்து 374 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் களம் இறங்கினர். இதில் பெர்னாண்டோ 5 ஓட்டங்களிலும், அடுத்து வந்த குசல் மெண்டிஸ் ஓட்டம் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர்.
அடுத்து களம் இறங்கிய சரித் அசலங்கா தனது பங்குக்கு 23 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் உம்ரான் பந்துவீச்சில் அவுட் ஆனார். இலங்கை அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பதும் நிசாங்கா 72 ஓட்டங்கள் அடித்திருந்த நிலையில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த வீரர்கள் டி சில்வா 47 ஓட்டங்களிலும், ஹசரங்கா 16 ஓட்டங்களிலும், வெல்லாகலே ஓட்டம் எதுவும் எடுக்காமலும், கருணாரத்னே 14 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
அதிரடியாக இலங்கை கேப்டன் ஷனகா கடைசி வரை களத்தில் நின்று சதம் அடித்தார். அவர் 108 ஓட்டங்கள் அடித்தார்.
இந்தியா முன்னிலை
இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணி தரப்பில் உம்ரான் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும், ஷமி, சஹால், பாண்ட்யா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி வியாழக்கிழமை நடைபெறுகிறது.