பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல்
பிரித்தானியாவை ஆண்ட எதிரெதிர் கட்சிகள் இரண்டுமே புலம்பெயர்தலை அரசியலாக்கிய நிலையில், அவர்கள் ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தல், இப்போது அவர்களுக்கே சிக்கலை உருவாக்கியுள்ளது!
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி
போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக் போன்றவர்களின் தலைமையில், முந்தைய கன்சர்வேட்டிவ் கட்சியினர், நாட்டில் பல பிரச்சினைகள் இருந்த நிலையிலும், புலம்பெயர்தலை முக்கிய பிரச்சினையாக்கி, அதை வைத்து அரசியல் செய்தார்கள்.

Credit : Reuters
அவர்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த லேபர் கட்சியினரும், அதே ஃபார்முலாவை பின்பற்றினார்கள்.
விடயம் என்னவென்றால், லேபர் அரசு புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த எடுத்துவரும் கடுமையான முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகத் தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் 944,000 ஆக இருந்த நிகர புலம்பெயர்தல், 2025 ஜூன் வரையிலான காலகட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு குறைந்து 204,000 ஆகியுள்ளது.
அதேபோல, 2025ஆம் ஆண்டைப் பொருத்தவரை, பிரித்தானியாவுக்கு வந்தவர்களில் வெறும் 5 சதவிகிதம் பேர் மட்டுமே சிறுபடகுகள் மூலம் வந்துள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும், லேபர் அரசின் உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தியே தீருவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுவருகிறார்.

Credit : Getty Images
அகதிகள் பிரித்தானியக் குடியுரிமை கோர 20 ஆண்டுகள் காத்திருக்கவேண்டும், புகலிடக்கோரிக்கையாளர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும், புலம்பெயர்ந்தோருடன் அவர்களுடைய குடும்பத்தினர் இணைய தடை, அகதிகளாக வந்தவர்களின் சொந்த நாடுகளில் நிலைமை மேம்பட்டால், அவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுவார்கள் ஆகியவை அவரது கடுமையான நவடிக்கைகளில் அடங்கும்.
ஆனால், லேபர் அரசு புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த இவ்வளவு நடவடிக்கைகள் எடுத்தும், மக்கள் அதை நம்புவதாகத் தெரியவில்லை.
அரசு புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவே அவர்கள் இன்னமும் நம்புவது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆம், மூன்றில் இரண்டு பங்கு, அல்லது, 67 சதவிகித பிரித்தானிய வாக்காளர்கள், நிகர புலம்பெயர்தல் அதிகரித்துள்ளது என்றே நம்புவதாக தெரிவித்துள்ளார்கள்.
சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் புலம்பெயர்வோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
ஆனால், 79 சதவிகித வாக்காளர்கள், புலம்பெயர்தல் அதிகரித்துள்ளதாகவும், அரசு சிறுபடகுகளைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தவேண்டும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்கள்.
ஆக, ஆளும் கட்சிகள் புலம்பெயர்தலை அரசியலாக்கிய நிலையில், அவர்கள் ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலே இப்போது அவர்களுக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது.
ஆம், இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள், அடுத்த தேர்தலில் அரசின் தலைவிதியை தீர்மானிக்கும் வாக்காளர்கள்.
ஆக, அவர்கள் இப்படி புலம்பெயர்தலைக் குறித்து கொண்டிருக்கும் தவறான எண்ணங்கள், அடுத்த தேர்தலில் ஆளும் கட்சிக்கு பாதகமாக அமையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |