கோவிட் தொற்றுக்கு இருவர் பலி... பரபரப்பாகும் இந்திய மாநிலம்
இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் இரண்டு பேர் கோவிட் தொற்றுக்கு பலியாகியுள்ளதைத் தொடர்ந்து அம்மாநிலம் பரபரப்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
கோவிட் தொற்றுக்கு இருவர் பலி...
ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் எட்டு பேருக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், இரண்டு பேர் கோவிட் தொற்றுக்கு பலியாகிவிட்டதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கோவிட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடப்பா மாவட்டத்தில் இரண்டு பேர் கோவிடுக்கு பலியானதைத் தொடர்ந்து, ஆந்திரப்பிரதேச சுகாதாரத்துறை அந்த பகுதியிலிருந்து 40 பேரிடம் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கோவிட் பரிசோதனைகள் துவக்கப்பட்டுள்ளன.
இரத்த மாதிரிகள் சேகரிக்கச் செல்வோர் பாதுகாப்பு உடைகள் அணிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

அரசு மருத்துவமனைகளிலும், 10 படுக்கைகள் கொண்ட வார்டுகள் கோவிட் நோயாளிகளுக்காக தயார் நிலையில் வைக்க ஆந்திரப்பிரதேச சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
தொற்று பரவலைத் தடுப்பதற்காக, கைகளைக் கழுவுதல், மாஸ்க் அணிதல் போன்ற நடவடிக்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த மருத்துவமனைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அருகிலுள்ள ஒடிஷா மாநிலமும், ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதிகளில் கோவிட் சோதனைகளைத் துவக்கியுள்ளதுடன், சுகாதாரத்துறையினர் தயார் நிலையில் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளதாக டெக்கான் ஹெரால்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |