சிறுபடகுகளை தடுக்க முயன்ற பிரித்தானியர்கள் இருவர் பிரான்சில் கைது
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக பிரித்தானிய வலதுசாரி அமைப்பினர் சிலர் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய விடயம் குறித்து கேள்விப்பட்டிருக்கலாம்.
இந்நிலையில், புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக பிரான்ஸ் சென்ற பிரித்தானியர்கள் இருவர் பிரான்ஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
புலம்பெயர்வோரை தடுக்கும் பிரித்தானியர்கள்
பிரித்தானியாவை மையமாகக் கொண்ட வலதுசாரி அமைப்பினர் சிலர், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக தாங்களே அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.

அவர்கள் பிரான்சுக்கே சென்று, பிரான்ஸ் கடற்கரைகளில் மணல் குவியல்களுக்குள் மறைத்துவைக்கப்பட்டுள்ள சிறு படகுகளின் எஞ்சின்களை அடித்து நொறுக்குவதுடன், கடலுக்குள் இறங்கி சிறுபடகுகளில் ஏற முயலும் புலம்பெயர்வோரை துரத்திவருகிறார்கள்.
பிரித்தானியர்கள் இருவர் பிரான்சில் கைது
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரைத் தடுக்கும் பிரித்தானியர்கள் கைது செய்யப்படுவார்கள் என பிரான்ஸ் அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், வலதுசாரி அமைப்பொன்றைச் சேர்ந்த இரண்டு பிரித்தானியர்களை பிரான்ஸ் பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

அவர்கள் பிரான்ஸ் கடற்கரையிலிருந்து புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபடுவதை நேரலையில் சமூக ஊடகம் ஒன்றில் ஒளிபரப்பியுள்ளார்கள்.
வெறுப்பை உண்டாக்கும் இடுகைகளை யூடியூபில் நேரலையில் வெளியிடுவதற்காக அவர்கள் பதிவு செய்துகொண்டிருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
35 மற்றும் 53 வயதுடைய அந்த இருவரும் காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள பிரான்ஸ் அதிகாரிகள், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |