பெங்களூரு ஹொட்டலில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஜேர்மனி நாட்டவர்
2 foreigners die of electrouction at bengaluru hotel: பெங்களூருவில் உள்ள சொகுசு ஹொட்டலின் நீச்சல் குளத்தில், ஜேர்மனி நாட்டவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஜேர்மனி நாட்டவர்
பெங்களூருவில், ஹில்டன் குழுமத்தின் ஒரு அங்கமான, கான்ராட் என்னும் 24 மாடிகளைக் கொண்ட ஒரு 5 நட்சத்திர சொகுசு ஹொட்டலின் நீச்சல் குளத்தில் நேற்று மாலை விபத்து நிகழ்ந்துள்ளது.

3 வது மாடியில் உள்ள நீச்சல் குளத்தில் இருந்த, 2 வெளிநாட்டவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் ஜேர்மனியைச் சேர்ந்த 57 வயதான அலெக்சாண்டர் மாக்சிமிலியன் தீஸ் (Alexander Maximilian Theiss) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானப் பணியாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.
உயிரிழந்த மற்றொருவர் ஸ்லோவாக் நாட்டவரான 45 வயது ஜூராஜ் ஹோர்வட் (Juraj Horvat), ஐபிஎம் என்ற தொழில்நுட்ப நிறுவனத்தில் திட்ட மேலாளராகப் பணியாற்றி வந்தார்.
ஹொட்டலில் தங்கியிருந்த 41 வயதான மேத்யூ டெசாண்டிஸ் என்ற அமெரிக்கர் மற்றும் நீச்சல் குளப் பணியாளரான 28 வயதான ராகுல் திவாரி ஆகிய இருவரும், அவர்களை காப்பாற்றும் முயற்சியில் காயமடைந்துள்ளனர்.
ஸ்லோவாக் நாட்டவரான ஜூராஜ் ஹோர்வட்டுக்கு மணிபால் மருத்துவமனையில் CPR சிகிச்சையளிக்கபட்ட போதிலும் அவர் உயிரிழந்தார். ஜேர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் மாக்சிமிலியன் தீஸ், மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டபோதே இறந்துவிட்டார்.
காயமடைந்த அமெரிக்கரும், நீச்சல் குளப் பணியாளரும் தற்போது சீரான உடல்நிலையில் உள்ளனர்.
மனைவி புகார்
உயிரிழந்த ஜேர்மன் நாட்டவரான அலெக்சாண்டரின் மனைவி சில்வியா ஒட்டாவா, நீச்சல் குளத்தை முறையாகப் பராமரிக்கத் தவறிய கான்ராட் ஹோட்டல் நிர்வாகத்தின் அலட்சியத்தால் மரணங்கள் நிகழ்ந்ததாகக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இந்தச் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இருவர் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தமும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள ஹொட்டல் நிர்வாகம், இந்த சம்பவத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என தெரிவித்துள்ளது.