ஜேர்மனியில் ஆயுதங்களை பரிசோதிக்கச் சென்ற அதிகாரிகளுக்கு நேர்ந்த துயரம்
Two German officials shot dead during gun check: ஜேர்மானியர் ஒருவரின் வீட்டில் ஆயுதங்கள் முறையாக பாதுகாக்கப்பட்டுள்ளனவா என சோதனை செய்யச் சென்ற அதிகாரிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.
ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில், ஜேர்மானியர் ஒருவரின் வீட்டில் ஆயுதங்கள் முறையாக பாதுகாக்கப்பட்டுள்ளனவா என சோதனை செய்வதற்காக இரண்டு அதிகாரிகள் சென்றுள்ளார்கள்.
அதிகாரிகளுக்கு நேர்ந்த துயரம்
நேற்று மதியம், Berngau என்னும் கிராமத்திலுள்ள அந்த வீட்டுக்கு 45 வயது ஆண் அதிகாரி ஒருவரும், 54 வயது பெண் அதிகாரி ஒருவரும் வழக்கமான ஆயுதங்கள் பாதுகாப்பு தொடர்பான பரிசோதனைக்காக சென்றுள்ளனர்.
அப்போது, அந்த வீட்டிலிருந்த 60 வயது நபர் அவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

என்ன நடந்தது, எதனால் அவர் அவர்களை துப்பாக்கியால் சுட்டார் என்பது தெரியவில்லை.
பின்னர் தன் வீட்டுக்குள் பதுங்கிய அவருடன் சுமார் 12 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள் பொலிசார்.
பேச்சுவார்த்தை பலனளிக்காததால், இன்று அதிகாலை 2.20 மணியளவில், வெடிகுண்டு மூலம் வீட்டுக்கதவை வெடிக்கச் செய்து திறந்து வீட்டுக்குள் நுழைந்த பொலிசார், வீட்டுக்குள் பதுங்கியவரின் காலில் துப்பாக்கியால் சுட்டு அவரைப் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், அவரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆண் அதிகாரியின் உடல் அந்த வீட்டுக்கு வெளியேயும், பெண் அதிகாரியின் உடல் வீட்டுக்குள்ளேயும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.