ஜேர்மனியில் தீவிபத்தில் உயிரிழந்த இந்தியர்கள்: சமீபத்திய தகவல்
Bodies of two Indians killed in Germany apartment fire arrive in Keralam: ஜேர்மனியில் தீவிபத்தில் பலியான இந்தியர்களின் உடல்கள் கேரளா சென்றடைந்துள்ளன.
வேலை மற்றும் படிப்புக்காக ஜேர்மனி சென்ற மூன்று இந்தியர்கள் தீவிபத்தொன்றில் பலியான சம்பவம் நினைவிருக்கலாம்.
அவர்களில் இரண்டு பேருடைய உடல்கள் இந்தியா சென்றடைந்துள்ளன.
இந்தியர்கள் மூன்று பேருக்கு நேர்ந்த துயரம்
இம்மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 13ஆம் திகதி, அதிகாலை 4.15 மணியளவில், மேற்கு ஜேர்மனியிலுள்ள Bochum என்னுமிடத்தில் அமைந்துள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் தீப்பற்றியது.

அந்தத் தீயில், அந்த வீட்டில் தங்கியிருந்த இந்தியர்கள் மூன்று பேர் உயிரிழந்துவிட்டார்கள்.
கேரளாவிலுள்ள கொல்லம் என்னுமிடத்தைச் சேர்ந்த அஞ்சலி ஷீலா ஜாய் (27), எர்ணாகுளம் என்னுமிடத்தைச் சேர்ந்த சிவின் ஜானி (26) மற்றும் இடுக்கி என்னுமிடத்தைச் சேர்ந்த நோவா சாபு (25) என்பவர்களே உயிரிழந்துள்ளார்கள்.
சமீபத்திய தகவல்
பிள்ளைகளுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக, அவர்களுடைய உடல்கள் இந்தியா வருவதற்காக அவர்களுடைய குடும்பங்கள் கவலையும் கண்ணீருமாக காத்திருந்த நிலையில், இன்று, சிவின் ஜானி மற்றும் அஞ்சலியின் உடல்கள் கேரளா சென்றடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று அதிகாலை 1.30 மணியளவில், கேரளாவிலுள்ள நெடும்பசேரி விமான நிலையத்தில், அவர்களுடைய உடல்களை அவர்களுடைய உறவினர்கள் பெற்றுக்கொண்டுள்ளார்கள்.
அவர்கள் இருவரின் உடல்களும் அதிகாரப்பூர்வ அரசு நடைமுறைகளுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அதன்பின் அவர்களுடைய சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்லப்பட உள்ளன.
அதே நேரத்தில், நோவா சாபுவின் உடல் இன்று இரவு 8.15 மணியளவில்தான் இந்தியா சென்றடைய உள்ளது.
இதற்கிடையில், அவர்கள் தங்கியிருந்த வீட்டில் தீவைத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.