RAF ஃபேர்போர்ட் சதித்திட்டம்: ஜாமீனில் விடுவிக்கப்பட்ட இருவர் மீண்டும் கைது: ஈரானுடன் தொடர்பு?
2 Men Re-Arrested in Connection with RAF Fairford Plot: பிரித்தானியாவின் RAF விமானப்படை தளத்தில் மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் தொடர்பாக இருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
RAF ஃபேர்போர்ட் சதித்திட்டம்
பிரித்தானியாவில் உள்ள RAF ஃபேர்போர்ட் அமெரிக்க ராணுவ விமான தளத்திற்கு அருகே செப்டம்பர் 27ம் திகதி அதிகாலை மேற்கொள்ளப்பட்ட பெரிய பாதுகாப்பு நடவடிக்கைக்கு பிறகு சந்தேகத்திற்குரிய 5 ஆண்கள் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தனர்.
இந்த நடவடிக்கையை அடுத்து சந்தேகத்திற்குரிய மேலும் 2 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை செய்தனர்.

விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
ஆனால் RAF ஃபேர்போர்ட் விமான தளத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாக தேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவு மூத்த தேசிய ஒருங்கிணைப்பாளர் விக்கி ஈவன்ஸ் தெரிவித்து இருந்தார்.
இருவர் மீண்டும் கைது
இந்நிலையில் RAF விமானப்படை தளத்தில் மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் இரண்டு பேரை செவ்வாய்க்கிழமை பிரித்தானியாவின் பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறையினர் மீண்டும் கைது செய்துள்ளனர்.

மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள அந்த இரண்டு பேரும் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவர் 24 வயதுடைய பிரித்தானிய குடிமகன் ஆவார், இவர் RAF விமானப்படை தளத்திற்கு அருகே முதன்முதலில் கைது செய்யப்பட்ட நபர் ஆவார்.
இரண்டாவது நபர் 25 வயதுடைய பிரித்தானிய - ஈரான் இரட்டை குடியுரிமை பெற்றவர் ஆவார். இவர் அக்டோபர் 1ம் திகதி மத்திய லண்டன் பகுதியில் வைத்து செய்யப்பட்டவர் ஆவார்.
வெளிநாட்டு உளவு அமைப்பு ஒன்றுக்கு உதவியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் இந்த இரண்டு பேரும் தற்போது காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த சதித் திட்டத்தின் பின்னணியில் ஈரான் அரசு சார்ந்த அமைப்புகள் இருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.