கவச வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 2 மில்லியன் யூரோக்கள்: கொள்ளை சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் வெளியிட்டுள்ள தகவல்
ஜனவரி மாத துவக்கத்தில், பிரான்ஸ் எல்லைக்கருகில் உள்ள Sarrelouis என்னும் ஜேர்மன் நகரத்தில் கவச வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 2 மில்லியன் யூரோக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
ஐந்துக்கும் அதிகமான ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் வெடிகுண்டுகளைப் பயன்படுத்து வாகனத்தைத் தாக்கி பணத்தைக் கொள்ளையடித்தனர். இந்த சம்பவத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில், வாகனத்தின் பாதுகாவலர்களில் ஒருவரும் பொலிசார் ஒருவரும் காயமடைந்தனர்.
கொள்ளையர்கள் வெவ்வேறு வாகனங்களில் ஏறி தப்பிச் சென்றனர். தப்பிச் செல்லும்போது ஜேர்மன் பொலிசார் அவர்களை பொலிஸ் காரில் துரத்த, அவர்கள் பொலிசாரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர்.
பிரான்சில் கொள்ளையர்கள் கைது
Photo by BERTRAND GUAY / AFP
அந்த கொள்ளை சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட Gemal D (58) என்பவரும், வேறு இரண்டு பேரும் Pyrenees-Orientales பகுதியில் பிரான்ஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் ஐந்து பேர் வட பிரான்ஸ் மற்றும் பாரீஸ் பகுதியில் சிக்கினர். கடந்த இரண்டு நாட்களில் இந்த எட்டு பேரும் பிரான்ஸ் பொலிசாரிடம் சிக்கியுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 10 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவார்.
விடயம் என்னவென்றால், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 860,000 யூரோக்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது, மீதமுள்ள பணம் இதுவரை கிடைக்கவில்லை.