இந்திய அணியில் மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா - முதல் ஒருநாள் போட்டி ரத்து?
இந்திய அணி வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு உறுதியாவதால் பிசிசிஐ அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டிகள் பிப்ரவரி 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதற்காக இந்திய வீரர்கள் அனைவரும் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி விமானம் மூலம் அகமதாபாத்திற்கு வரவழைக்கப்பட்டு பயோ பபுளுக்குள் சேர்க்கப்பட்டனர். இந்த தனிமைப்படுத்தலின் போது ஒவ்வொரு நாளும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் எடுக்கப்பட்ட பரிசோதனையில் மொத்தம் 3 வீரர்கள் உட்பட மொத்தம் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ருத்துராஜ் கெய்க்வாட், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூவருக்கும் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாற்று வீரராக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டார்.
இதனிடையே தற்போது மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அணியின் முன்னணி பவுலர்கள் அக்ஷர் பட்டேல், முகமது சைனி ஆகியோருக்கு கொரோனா உறுதியானதால் நேற்றைய பயிற்சி ஆட்டம் முழுவதும் ரத்து செய்யப்பட்டது.
இதனால் முதல் ஒருநாள் போட்டி ரத்து செய்யப்பட்ட வாய்ப்பிருக்கலாம் அல்லது ஒத்தி வைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.