உலகளவில் செல்வாக்கு மிக்க இந்திய வம்சாவளியினர்; முதல் 5 இடத்தில் 2 தமிழர்கள்
2 tamils in top 5 of hurun indian origin leaders: 2026 ஆம் ஆண்டின் உலகளவில் செல்வாக்கு மிக்க இந்திய வம்சாவளி வணிக தலைவர்களின் பட்டியலில், முதல் 5 இடத்தில் சுந்தர் பிச்சை மற்றும் நீல் மோகன் ஆகிய இரு தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டவர்கள் இடம்பிடித்துள்ளனர்.
செல்வாக்கு மிக்க இந்திய வம்சாவளியினர்
இந்தியர்கள் உலகளவில் பல்வேறு நாடுகளில், அரசியல், வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.
இந்நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான உலகளவில் செல்வாக்கு மிக்க இந்திய வம்சாவளி வணிக தலைவர்களின் பட்டியலை HSBC இந்தியா மற்றும் ஹுருன் இந்தியா வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், இந்தியாவிற்கு வெளியே 200 நிறுவனங்களை வழிநடத்தும் 236 நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் சிஇஓ சுந்தர் முதலிடம் பிடித்துள்ளார். ஆல்ஃபபெட் நிறுவன மதிப்பு 4.2 டிரில்லியன் டொலராக உள்ளது.
2வது இடத்தில் மைக்ரோசாஃப்ட் தலைவர் சத்யா நாதெள்ளா உள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவன மதிப்பு 2.6 டிரில்லியன் டொலராக உள்ளது.
1.4 டிரில்லியன் டொலர் மதிப்புள்ள மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர்சஞ்சய் மெஹ்ரோத்ரா மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.
யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன் மற்றும் கூகுள் கிளவுட் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் குரியன் ஆகியோர் 4வது மற்றும் 5வது இடங்களைப் பிடித்தனர்.

இதில், சுந்தர் பிச்சை மற்றும் நீல் மோகன் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டவர்கள் ஆவார்கள்.
இதில், 177 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இங்கிலாந்து தலா 15 பேருடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சிங்கப்பூரில் 9 பேர் உள்ளனர்.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 200 நிறுவனங்களின் மொத்த மதிப்பு 15 டிரில்லியன் டொலராக உள்ளது. இது 2024 ஆம் ஆண்டில் இருந்த 9.9 டிரில்லியன் டாலரிலிருந்து 53% அதிகரித்துள்ளது.
200 நிறுவனங்களில் 103 நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படுபவை அல்லது செயற்கை நுண்ணறிவுடன் ஒருங்கிணைக்கப்பட்டவை. இவற்றின் மொத்த மதிப்பு 10.7 டிரில்லியன் டொலர்கள் ஆகும்.
வாட்ஸ்அப் நிறுவனத்தின் குணால் ஷா உட்பட 89 புதிய நபர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், சுமார் 699 பில்லியன் டொலர் கூட்டு மதிப்புடைய நிறுவனங்களைச் சேர்ந்த 16 பெண் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மெர்கோர் நிறுவனத்தின் 23 வயதான இணை நிறுவனர்களான ஆதர்ஷ் ஹிரேமத், சூர்யா மிதா ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இளையவர்கள் ஆவர்.

சிம்பொனிஏஐ நிறுவனத்தைச் சேர்ந்த 79 வயதான ரோமேஷ் வத்வானி மூத்தவர் ஆவார். இதில், 58% பேர் தங்களது இளங்கலைப் படிப்பை இந்தியாவில் முடித்துள்ளனர்.