பிரித்தானியாவில் 15 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து: கொலை வழக்கில் 2 சிறுவர்கள் கைது
பிரித்தானியாவின் கில்ட்போர்டு பகுதியில் 15 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து
கடந்த திங்கட்கிழமை மாலை பிரித்தானியாவின் கில்ட்ஃபோர்டு(Guildford) பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 15 வயது லூயிஸ் கேப்ரியல் குவெம்பஸ்(luis Gabriel Guembes) என்ற சிறுவன் உயிரிழந்துள்ளான்.

மாலை 6.10 மணியளவில் ஸ்டோக் பூங்காவிற்கு அருகில் லிடோ சாலையில் வன்முறை தாக்குதல் நடைபெற்றதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்தனர்.
கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இரண்டு சிறுவர்கள் கைது

இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த பொலிஸார் இரண்டு சிறுவர்களை கொலை குற்றச்சாட்டின் கீழ் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மீதும் கொலை, கொள்ளைக்கான சதி மற்றும் ஆயுதம் வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருவரும் சனிக்கிழமை கில்ட்ஃபோர்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |