இங்கிலாந்தில் ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்து: 20 பேர் காயம்
train derails in uk: இங்கிலாந்தில், ரயில் ஒன்று தடம்புரண்டதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இங்கிலாந்திலுள்ள லண்டன் விக்டோரியா ரயில் நிலையத்திலிருந்து ஈஸ்ட்போர்ன் ரயில் நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்று, கிழக்கு சசெக்ஸிலுள்ள லூயிஸ் என்னும் இடத்தினருகே தடம்புரண்டது.
ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்து

நேற்று மதியம் 3.45 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2.24க்கு புறப்பட்ட அந்த ரயில், ஈஸ்ட்போர்ன் நிலையத்தை அடைய சிறிது நேரமே இருந்த நிலையில், திடீரென வேகமெடுத்ததாக அந்த ரயிலில் பயணித்த பயணிகள் தெரிவிக்கிறார்கள்.
அடுத்த கணம், ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் தடம்புரண்டுள்ளன.
ரயில் மொத்தம் 150 பயணிகள் இருந்த நிலையில், கடைசி பெட்டிகளில் இருந்த 40 பேர் கவிழ்ந்த பெட்டிகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளார்கள்.

தகவலறிந்து ரயில்வே பொலிசார், சசெக்ஸ் பொலிசார், தீயணைப்பு வீரர்கள், மீட்புக் குழுவினர் ஆம்புலன்ஸ் சேவை, மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என அனைவரும் சம்பவ இடத்துக்கு விரைய, அதைத் தொடர்ந்து 20 பேர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மாலை 6.00 மணி வாக்கில் ரயில் பெட்டிகளுக்குள் சிக்கியிருந்த அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக ஒரு உயிர்ச்சேதம் கூட ஏற்படவில்லை என்பது ஆறுதலளிக்கும் செய்தி!
சம்பந்தப்பட்ட ரயில் பாதை மூடப்பட்டுள்ள நிலையில், குறைந்தபட்சம் திங்கட்கிழமை வரை அந்த பாதையில் ரயில்கள் இயங்காது என்றும் மக்கள் பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ளுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ரயில் பாதையில் ஒரு இடத்தில் தண்டவாளம் வளைந்திருப்பதைக் காணமுடிகிறது. அது ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட வளைவா அல்லது தண்டவாளம் வளைந்திருந்ததால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |