ஜேர்மனியில் வீடொன்றில் மோதி உள்ளே நுழைந்த பள்ளிப் பேருந்து
School bus crashes into house in Germany, at least 20 people injured: ஜேர்மனியில் பள்ளிப் பேருந்து ஒன்று வீடொன்றில் மோதி உள்ளே நுழைந்ததில் 20 பேர் வரை காயமடைந்துள்ளார்கள்.
வடக்கு ஜேர்மனியில், பள்ளிப்பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 பேர் வரை காயமடைந்துள்ளார்கள்.
விபத்துக்குள்ளான பள்ளிப் பேருந்து
இன்று காலை, வடக்கு ஜேர்மனியின் Schleswig-Holstein மாகாணத்திலுள்ள Bad Oldesloe என்னுமிடத்தில், பள்ளிப்பேருந்து ஒன்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்திருக்கிறது.

இந்நிலையில், உள்ளூர் நேரப்படி காலை 7.20 மணியளவில், அந்தப் பேருந்து, வளைவொன்றில் கார் ஒன்றின் மீது உரசியதைத் தொடர்ந்து, சாரதி வாகனத்தைத் திருப்ப, பேருந்து வீடொன்றில் மோதி உள்ளே நுழைந்துள்ளது.
பலர் பாதிக்கப்பட்டுள்ள பேரழிவுச் சம்பவம் என அவசர உதவிக் குழுவினர் அறிவித்துள்ள இந்த விபத்தில், 20 பேர் வரை காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர்களில் நான்கு பேருடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக ஜேர்மன் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
பேருந்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவ மாணவியர் என்றாலும், அவர்களுடன் பெரியவர்கள் சிலரும் பயணித்துள்ளார்கள்.
அவர்களில் சிலருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.