தெருவை கூட்டும் நண்பருக்கு பிரித்தானிய கோடீஸ்வரர் கடனாக கொடுத்த 200,000 பவுண்டுகள்: காத்திருந்த ஏமாற்றம்
பிரித்தானிய கோடீஸ்வரர் ஒருவர், தெரு கூட்டுபவரான தன் நண்பர் ஒருவருக்கு 200,000 பவுண்டுகள் கடனாக கொடுத்துள்ளார்.
1979ஆம் ஆண்டு, சைமன் (Simon Denyer) என்பவரும் ஜான் (John Rankin Cornforth) என்பவரும் புத்தாண்டு பார்ட்டி ஒன்றில் சந்தித்திருக்கிறார்கள். இருவரும் சேர்ந்து மது குடிக்கும் நண்பர்களாகியிருகிறார்கள். காலப்போக்கில் ஜானுடைய நிலைமை முன்னேற்றம் அடைய, சைமனுடைய நிலைமையோ மோசமாகியுள்ளது.
ஜானுடைய தந்தை இறந்துபோக, அவரது தந்தை விட்டுச் சென்ற சொத்து அவரை கோடீஸ்வரராக்க, சைமனோ விவாகரத்து வரை, வாழ்வில் பல கஷ்டங்களை சந்தித்திருக்கிறார். விவாகரத்து வழக்குக்காக ஜான் சைமனுக்கு 26,300 பவுண்டுகள் கடனாக கொடுத்து உதவியிருக்கிறார்.
பிறகு சைமனுடைய மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்குவதற்காக, சைமனுடைய வீட்டுக் கடனை அடைப்பதற்காக என மொத்தம் 200,000 பவுண்டுகள் சைமனுக்கு கடனாக கொடுத்திருக்கிறார் ஜான்.
ஆனால், பத்து ஆண்டுகளாகியும் சைமன் ஜானுடைய பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை. ஆகவே ஜான் நீதிமன்றம் சென்றார்.
ஆனால், தன் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுப்பதற்காக ஜான் கொடுத்த தொகை மட்டும்தான், தான் கடனாகப் பெற்றது என்றும், வீட்டுக் கடனை அடைப்பதற்காக கொடுத்த தொகை, ஜான் தனக்கு பரிசாக கொடுத்தது என்றும் கூறிவிட்டார் சைமன்.
இருவரின் சட்டத்தரணிகளும் நீதிமன்றத்தில் தங்கள் வாதத்தை முன்வைத்தார்கள். ஜான் தரப்பில், அவர் சைமனுக்கு கொடுத்த மொத்த தொகையும் கடனாகக் கொடுக்கப்பட்டதுதான் என்றும், சைமன் தன் நண்பருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார் என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது.
சைமன் தரப்பிலோ, ஜான் கடன் கொடுத்ததற்கு ஆதாரமாக ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும், அவர் இப்போது பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் நிலையில் இல்லை என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது.
ஆனால், சைமன் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி, சைமன் வீட்டுக்கடனை அடைப்பதற்காக ஜான் கொடுத்த பணத்தை வட்டியுடன் கொடுக்கவேண்டும் என்றும், அவரது மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுப்பதற்காக கொடுக்கப்பட்ட பணத்தை, வட்டியில்லாமல் அசலை மட்டும் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.