பிரித்தானியாவில் Sandwich சாப்பிட்ட 200க்கும் அதிகமானோர் பாதிப்பு: பிரச்சினை கண்டுபிடிப்பு
பிரித்தானியாவில், பல்பொருள் அங்காடிகள் பல, 60க்கும் மேற்பட்ட சாண்ட்விச் முதலான உணவுப்பொருட்களை திரும்பப்பெறுவதாக அறிவித்தது நினைவிருக்கலாம். அந்த சாண்ட்விச்களில் ஈ கோலை என்னும் கிருமியின் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவை திரும்பப் பெறப்பட்டன.
தற்போது, அந்த ஈ கோலை கிருமியின் பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது தெரியவந்துள்ளதாக உணவு தரநிலை ஏஜன்சி தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் Sandwich சாப்பிட்டவர்கள் பாதிப்பு
பிரித்தானியாவில், இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 11ஆம் திகதி நிலவரப்படி, சாண்ட்விச் வகை உணவுகளை சாப்பிட்ட 211 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 67 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், சாண்ட்விச்களில் பயன்படுத்தப்பட்ட லெட்டூஸ் இலைகள் (lettuce leaves), ஈ கோலை கிருமியின் தாக்கத்துக்குக் காரணமாக அமைந்திருக்ககூடும் என உணவு தரநிலை ஏஜன்சி (The Food Standards Agency - FSA) தெரிவித்துள்ளது.
ஆடு மாடுகளின் சாணம் செடிகளுக்கு உரமாக பயன்படுத்தப்படுவதாலோ, அல்லது சாணத்திலிருந்து தண்ணீர் அல்லது மண்ணில் கிருமி பரவி, அந்த தண்ணீர் அல்லது மண்ணிலிருந்தும் லெட்டூஸ் இலைகளுக்கு இந்த ஈ கோலை கிருமிகள் பரவியிருக்கலாம் என்றும் கருதப்படுவதாக Harper Adams பல்கலையில், பயிர் அறிவியல் துறை பேராசிரியராக பணியாற்றும் Jim Monaghan என்பவர் கூறுகிறார்.
தற்போது, சாண்ட்விச்களில் பயன்படுத்தப்பட்ட லெட்டூஸ் இலைகளிலிருந்துதான் இந்த ஈ கோலை கிருமி பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என கருதப்பட்டாலும், அதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகும். ஏனென்றால், சாண்ட்விச்கள் தயாரானதுமே அவை விற்கப்பட்டுவிடுகின்றன, மக்கள் அவற்றை உண்டுவிடுகிறார்கள். ஆக, அந்த சாண்ட்விச்சிலிருந்த லெட்டூஸ் இலைகளிலிருந்துதான் கிருமி பரவியது என்பதை உறுதி செய்வது கடினம்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |