பிரித்தானியாவில் அடுத்த மாதம் ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாகும்! என்ன செய்ய வேண்டும்? ஆய்வாளர்கள் எச்சரிக்கை
பிரித்தானியாவில் வரும் ஆண்டில் ஒமைக்ரான் வைரஸ் பரவலை குறைக்க வேண்டும் என்றால், வீட்டில் இருந்து வேலை செய்வது போன்ற லேசான கட்டுப்பாடுகள் அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், தற்போது பிரித்தானியாவில் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால் நேற்று வரை 1265 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் இந்த நோய் பரவலை தடுக்க வேண்டும் என்றால், மீண்டும் சமூக கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்த வேண்டும், அப்படி அதை செய்ய தவறினால், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒமைக்ரான் வைரஸ் பரவலின் பெரிய அலையை பிரித்தானியா எதிர்கொள்ள நேரிடும் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் அதிக அளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள போதிலும், ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது இரட்டிப்பாகி வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் டெல்டா வைரஸ் தாக்கத்தை ஒமைக்ரான் முந்தியுள்ளது என்பதை இது எடுத்துக் காட்டுவதாக ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து வேலை செய்வது போன்ற லேசான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் 2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஒமைக்ரான் தாக்கத்தை குறைக்க முடியும் என்பது நம்பிக்கை என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் ரோசன்னா பர்னார்ட் கூறியுள்ளார்.
மேலும், முக கவசம் அணிவது, சமூக விலகல் ஆகியவை இன்றியமையாதவை என்றாலும் அது போதுமானதாக இருக்காது, என்று தெரிவித்துள்ளார்.