2022 உலகக்கோப்பை! மோசமாக ஆடிய வங்கதேசம் நேரடி தகுதி.. ஆனா நன்றாக ஆடிய இலங்கை அணிக்கு ’நோ’.. ரசிகர்கள் விமர்சனம்
2022-ல் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு சூப்பர் 12 சுற்றுக்கு ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது.
அதே நேரத்தில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மீண்டும் தகுதிச் சுற்று ஆடித்தான் சூப்பர்-12 சுற்றை அடைய முடியும். 2021 டி20 உலகக்கோப்பை வின்னர் மற்றும் ரன்னர் அணிகள் மற்றும் ஐசிசி தரவரிசையில் அடுத்து 6 இடங்களில் இருக்கும் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகியவை நேரடியாக சூப்பர்-12 சுற்றுக்குத் தகுதி பெறும்.
அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வி கண்ட வெஸ்ட் இண்டீஸ் ஐசிசி டி20 தரவரிசையில் 10ம் இடத்துக்கு சரிந்தது. இலங்கை அணி 9ம் இடத்துக்கு சரிந்தது.
இலங்கை அணி ஏற்கெனவே இந்த தொடரிலேயே தகுதிச் சுற்றில் ஆடித்தான் தகுதி பெற்றது. வங்கதேச அணி அனைத்துப் போட்டிகளிலும் தோல்வி அடைந்தாலும் 8ம் இடத்தில் இருப்பதால் நேரடியாக சூப்பர் 12-க்குத் தகுதி பெற்றது. காரணம் சொந்த ஊர் குழிப்பிட்சில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தை வீழ்த்தியதே காரணம்.
2 முறை டி20 உலகக்கோப்பை வென்ற அணி தகுதி சுற்றில் ஆட வேண்டும், ஆனால் சொத்தை அணியான வங்கதேசம் நேரடியாகத் தகுதி இதுதான் ஐசிசி தரவரிசையின் லட்சணம். அதுவும் வெஸ்ட் இண்டீஸ் இந்த முறை வங்கதேசத்தை வீழ்த்தியது. இதன் ஒரே வெற்றி இதுதான்.
இந்த உலகக்கோப்பையில் வங்கதேசத்தை ஒப்பிடும்போது இலங்கை அணி நிச்சயம் பரவாயில்லை. நிச்சயம் நன்றாக ஆடினர். இலங்கையிடமும் வங்கதேசம் தோற்றது. கத்துக்குட்டி அணியிடமும் தோற்றது. அந்த அணி நேரடியாகத் தகுதி பெறுகிறது.
நன்றாக ஆடிய இலங்கை மீண்டும் தகுதிச் சுற்று ஆட வேண்டுமாம்!
ஆனால் ஐசிசி தரவரிசை நிச்சயம் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய ஒன்றே. ஏனெனில் அனைத்துப் போட்டிகளையும் தோற்ற வங்கதேசம் நேரடித் தகுதி, வங்கதேசத்தைப் பந்தாடிய வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் 2022 உலகக்கோப்பை டி20யில் தகுதிச் சுற்று ஆடி தகுதி பெற வேண்டுமாம். இது எப்படி நியாயமாக இருக்கும் என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.