தென் கொரியாவில் ஆண்டுக்கு ரூ.69 லட்சம் ஊதியம் பெறும் சிறார்கள்
21 south korea minors earns rs.69 lakhs as business heads: தென் கொரியாவில் 21 சிறார்கள் ஆண்டுக்கு ரூ.69 லட்சம் ஊதியம் பெறுவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ.69 லட்சம் ஊதியம் பெறும் சிறார்கள்
தென் கொரியாவின் ஆளும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான மூன் ஜின்-சியோக், தேசிய சுகாதார காப்பீட்டு சேவைத் தரவுகளின்படி 18 மற்றும் 18 வயதிற்குட்பட்ட 1,909 சிறார்கள் கடந்த 5 ஆண்டுகளில் நிறுவன தலைவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதாவது ஆண்டுக்கு சராசரியாக 382 சிறார்கள் நிறுவனத் தலைவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
வயதுப் பிரிவுகளின்படி, ஆண்டு சராசரியாக 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 129 பேரும், 11 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் 151 பேரும், 6 முதல் 10 வயதுக்குட்பட்டவர்கள் 81 பேரும், 5 வயது அல்லது அதற்குக் குறைவான வயதுடையவர்கள் 22 பேரும் உள்ளனர்.
இவர்களில் 21 பேர், 100 மில்லியன் வோனுக்கும்(இந்திய மதிப்பில் ரூ.69 லட்சம்) அதிகமாக ஆண்டு ஊதியம் பெற்றுள்ளனர்.
இதில், 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 6 பேரும், 11 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் 12 பேரும், 6 முதல் 10 வயதுக்குட்பட்டவர்கள் 2 பேரும், ஒருவர் 5 வயது அல்லது அதற்கும் குறைவானவராக உள்ளார்.

5 ஆண்டுகளில் அதிக வருமானம் ஈட்டும் முதல் 100 சிறார் வணிக உரிமையாளர்களிடையே ஆய்வு செய்ததில், 95 பேர் ரியல் எஸ்டேட், குத்தகை மற்றும் வணிகச் சேவைகள் துறைகளில் உள்ளனர்.
4 பேர் மொத்த விற்பனை, சில்லறை விற்பனை மற்றும் நுகர்வோர் பொருட்கள் பழுதுபார்ப்புத் துறைகளிலும், ஒருவர் உற்பத்தித் துறையிலும் இருப்பது தெரியவந்துள்ளது.
தென்கொரியாவின் வணிகச் சட்டம் சிறார்களை வணிக நிறுவனங்களின் தலைவராக இருக்க அனுமதித்தாலும், பெயரளவிற்கு அவர்களுக்கு அந்த பதவியை அளித்து விட்டு செல்வந்த குடும்பங்கள் வரிச்சுமையை தவிர்க்க இந்த யுக்தியை பயன்படுத்துவதாக நம்பப்படுகிறது.
"இன்னும் மழலையாகாத ஒரு குழந்தை, ஒரு தொழில் அதிபராக ஆண்டுக்கு 100 மில்லியன் வோன் சம்பாதிப்பது, நமது சமூகத்தில் சமத்துவமின்மை எந்த நிலையில் உள்ளது என்பதைக் காட்டுகிறது," என மூன் தெரிவித்துள்ளார்.
மேலும், குடும்பத்தால் நடத்தப்படும் நிறுவனங்கள், முறையற்ற பரிசுகளை வழங்குவதற்கோ அல்லது பெற்றோரின் வருமானத்தை அவர்களின் பிள்ளைகளுக்கு மாற்றுவதற்கோ பயன்படுத்தப்படுகின்றனவா என விசாரிக்க வேண்டும் என தேசிய வரி சேவை மற்றும் தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை வலியுறுத்தியுள்ளார்.