பிரான்சில் கொல்லப்பட இருக்கும் 219 பசுக்கள்: கால்நடை நோய் தொற்று காரணமாக நடவடிக்கை...
பிரான்சிலிலுள்ள மாட்டுப்பண்ணை ஒன்றில் கால்நடை நோய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து 219 பசுக்கள் கொல்லப்பட உள்ளன.
கிழக்கு பிரான்சிலிலுள்ள மாட்டுப்பண்ணை ஒன்றில், பசு ஒன்றிற்கு பொவைன் புரூசெல்லாசிஸ் (Bovine brucellosis)என்னும் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக பிரான்ஸ் வேளாண்மைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொவைன் புரூசெல்லாசிஸ் என்பது, கால்நடைகளுடன் தொடர்பிலிருப்போரைத் தாக்கும் ஒரு தொற்றுநோயாகும்.
அது புரூசெல்லா என்னும் பாக்டீரியாவால் உருவாகிறது. இந்த வகை பாக்டீரியா, மாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள், நாய்கள் மற்றும் பன்றிகளை பாதிக்கக்கூடியதாகும்.
நோய் தொற்றிய விலங்கைத் தொடுவோர் அல்லது அதனை வளர்ப்போர் முதலானோருக்கு அந்த விலங்கிடமிருந்து இந்த பாக்டீரியா பரவக்கூடும். அத்துடன், நோய் தொற்றிய விலங்கின் மாமிசத்தைத் தொடுதல் அல்லது கிருமிநீக்கம் செய்ய்யப்படாத பால் மற்றும் பால் பொருட்களை உட்கொள்வதால் இந்த நோய் மனிதர்களுக்கும் தொற்றலாம்.
ஆகவே, நோய் பரவாமல் தவிர்ப்பதற்காக, புரூசெல்லாசிஸ் தொற்று கண்டறியப்பட்ட பசு இருந்த அந்த பண்ணையிலுள்ள 219 பசுக்களையும் கொல்வது என வேளாண்மை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அத்துடன், புரூசெல்லாசிஸ் காரணமாக தங்கள் பசுக்களை கொல்லவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாகியுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.