தமிழ்நாடு அரசின் வங்கி கணக்குகளிலிருந்து ரூ. 22.10 கோடி இணைய திருட்டு
22.10 croes stolen from tamilnadu govt bank accounts: தமிழ்நாடு அரசின் வங்கி கணக்குகளிலிருந்து ரூ. 22.10 கோடி இணைய திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.
அரசின் வங்கி கணக்குகளிலிருந்து ரூ. 22.10 கோடி திருட்டு
தமிழ்நாட்டில், ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்படும் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக அரசு ஒதுக்கும் நிதி, சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வங்கிக் கணக்குகளில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோருக்கு இந்த நிதியிலிருந்து பணம் வழங்கும் போது, வங்கிகளுக்கும் ஊராட்சி ஒன்றியங்களுக்கும் இடையே பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பிரத்யேக இணையதளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஊராட்சி செயலாளர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் தங்களுக்கென வழங்கப்பட்டுள்ள பயனாளர் அடையாள எண் மற்றும் ரகசிய கடவுச்சொல்லைப் பயன்படுத்தி இந்த இணையதளத்தில் உள்நுழைந்து பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டிலுள்ள 3 ஊராட்சி ஒன்றியங்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து மொத்தமாக ரூ.22.10 கோடி பணம் மாயமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தின் வங்கிக்கணக்கிலிருந்து சுமார் ரூ.14 கோடியும், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் வங்கிக்கணக்கிலிருந்து சுமார் ரூ. 5 கோடியும், நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி ஒன்றியத்தின் வங்கிக்கணக்கிலிருந்து சுமார் ரூ. 3.10 கோடியும் திருடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
3 மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான முறையில் வங்கிக்கணக்கிலிருந்து பணம் திருடுப்பட்டுள்ளதால், இதன் பின்னணியில் வெளிநாடுகளை சேர்ந்த ஒருங்கிணைந்த ஹேக்கிங் கும்பல் இருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக டிஜிட்டல் மோசடி முறையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அரசின் வங்கி கணக்குகளிலே இணைய மோசடி நடைபெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.