சண்டிபுரா வைரஸ் பாதிப்பு - குஜராத்தில் 22 குழந்தைகள் உயிரிழப்பு
சண்டிபுரா வைரஸ் பாதிப்பால் குஜராத்தில் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
சண்டிபுரா வைரஸ் பாதிப்பு
குஜராத்தில் இந்த பருவமழைக் காலத்தில் சண்டிபுரா வைரஸ் (CHPV) காரணமாக 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் பிரஃபுல் பன்சேரியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், நோய் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட 184 பேரில் 35 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காந்திநகர், பதான், ராஜ்கோட் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிறந்த மற்றும் அதி உயர் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அவர்களின் உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றனர்.
மூளை அழற்சி வைரஸைப் பரப்புவதற்குக் காரணமான மணீ ஈக்களைக் குறிவைத்து, கால்நடை வளர்ப்பு நடைபெறும் பகுதிகளில் சுகாதாரக் குழுவினர் பூச்சிக்கொல்லிகளைத் தெளித்து வருகின்றனர்" என தெரிவித்துள்ளார்.
சண்டிபுரா வைரஸ் (CHPV) என்பது நோய்த்தொற்றுள்ள, இரத்தம் குடிக்கும் பூச்சிகள் மூலம் பரவுகிறது.

இது, முதன்முதலில் 1965 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள சண்டிபுரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு நோயாளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.
தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC), மணீ ஈக்களையே இந்நோய் பரவுதலுக்கான முக்கியக் கடத்திகளாக அடையாளம் காண்கிறது.
இது காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் சளி போன்ற சாதாரணமான அறிகுறிகளுடன் தொடங்கி சில நோயாளிகளுக்கு மூளையை விரைவாகத் தாக்கக்கூடும்.
கடுமையான மூளை அழற்சி உருவாகும்போது, வலிப்பு, உணர்வு நிலை மாற்றம் மற்றும் கோமா ஆகியவை ஏற்படலாம்.
இந்த நோய் வேகமாகப் பரவக்கூடும் என்றும், கடுமையான பாதிப்புகள் உள்ளவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 48 முதல் 72 மணி நேரத்திற்குள் மரணம் ஏற்படக்கூடும் என்றும் NCDC தெரிவித்துள்ளது.
தற்போது சண்டிபுராவுக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட வைரஸ் எதிர்ப்பு சிகிச்சையோ இல்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |