நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி 24,000 புகலிடக்கோரிக்கையாளர்கள் ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படலாம்...
சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவது சட்டத்துக்கு விரோதமானது என்ற நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி 24,000 புகலிடக்கோரிக்கையாளர்கள் ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டா போன்ற ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்கு நாடுகடத்த பிரித்தானிய அரசு திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் பிரித்தானிய அரசின் திட்டம் குறித்து தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் ஒன்றும், ருவாண்டா நாடு பாதுகாப்பான நாடாக கருதப்படலாம் என்று கூறியிருந்தது.
அந்த தீர்ப்பை எதிர்த்து புகலிடக்கோரிக்கையாளர்கள் பலர், சில மனிதநேயக் குழுக்கள் மற்றும் எல்லை அலுவலர்கள் யூனியன் ஒன்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் சென்றனர்.
மேல்முறையீட்டு நீதிமன்றம், சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் பிரித்தானிய அரசின் திட்டம் சட்டவிரோதமானது என்று கூறியுள்ளது.
அத்துடன், ருவாண்டா பாதுகாப்பான நாடாக கருதப்பட்ட முடியாது என்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
Niklas Halle’n/AFP/Getty Images
தீர்ப்பையும் மீறி...
ஆனால், நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி 24,000க்கும் அதிகமான புகலிடக்கோரிக்கையாளர்கள் ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
2021 ஜனவரி முதல், 2023 மார்ச் வரையிலான காலகட்டத்தில், 24,083 புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு, அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு நாடுகடத்தப்பட இருப்பதாக கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ள விடயம், தகவலறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி பெறப்பட்ட உள்துறை அலுவலக தரவு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
அந்த புகலிடக்கோரிக்கையாளர்கள், பிரித்தானியாவில் புகலிடம் கோரும் முன் வேறொரு பாதுகாப்பான நாடு வழியாக பிரித்தானியாவை வந்தடைந்துள்ளார்கள்.
ஆகவே, அவர்கள் பிரித்தானியாவில் புகலிடம் கோர முடியாது என பிரித்தானிய உள்துறை அலுவலகம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Rex/Shutterstock
ஆக, அந்த புகலிடக்கோரிக்கையாளர்கள், பிரித்தானியாவில் புகலிடம் கோரும் முன் வேறொரு பாதுகாப்பான நாடு வழியாக பிரித்தானியாவை வந்தடைந்துள்ளதால், இந்த வழக்கை பிரித்தானியாவில் முடிவுசெய்யமுடியாது.
எனவே, அந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் பதுகாப்பான மூன்றாவது நாடு ஒன்றிற்கு அனுப்பப்பட்டு, அங்கு அவர்களது புகலிடக்கோரிக்கை குறித்த முடிவு தீர்மானிக்கப்படும்.
அப்படி ஒரு நாட்டுக்கு புகலிடக்கோரிக்கையாளர்களை அனுப்ப பிரித்தானியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள ஒரே நாடு ருவாண்டாதான்.
இப்போதைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் அவர்களை ருவாண்டாவுக்கு அனுப்புவது சட்ட விரோதமானது என்று தீர்ப்பளித்தாலும், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல பிரித்தானிய அரசு திட்டமிட்டு வருகிறது.
எனவே, எதிர்காலத்தில் இந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் அனைவரும் நாடுகடத்தப்படும் அபாயம் தொடர்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |