இலங்கை அணியிலிருந்து வெளியேறிய நட்சத்திர வீரர்! என்ன காரணம்? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இலங்கை நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தனிப்பட்ட காரணங்களுக்கு தன்னை அணியிலிருந்து விடுக்குமாறு விடுத்த கோரிக்கையை இலங்கை கிரிக்கெட் ஏற்றுக்கொண்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் இலங்கை கிரிக்கெட்டிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
இலங்கை அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவரை போன்ற மூத்த வீரர்களை ஓரங்கட்டியதே மேத்யூஸின் இந்த முடிவுக்கு காரணம் என கூறப்பட்டது.
எனினும், மேத்யூஸ் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகமல் இருந்தது.
இந்நிலையில் மேத்யூஸ் குறித்து இலங்கை கிரிக்கெட் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி-20 தொடருக்கு பரிசீலிக்கப்படவுள்ள கிரிக்கெட் தேர்வாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட 30 வீரர்களில் 29 வீரர்கள் சுற்றுப்பயண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
அந்த 30 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்ட ஏஞ்சலோ மேத்யூஸ், தனிப்பட்ட காரணங்களால், மேலதிக அறிவிப்பு வரும் வரை, அவரை தேசிய கடமைகளில் இருந்து விடுவிக்குமாறு இலங்கை கிரிக்கெட்டைக் கேட்டுக்கொண்டார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.