கொரோனா தொற்றால் உயிரிழந்த நபர்! இறந்தவரின் செல்பேசிக்கு வந்த மெசேஜ்... அதிர்ச்சியில் குடும்பத்தினர்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு உயிரிழந்த நபர் 2வது டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டதாக குறுஞ்செய்தி வந்திருப்பது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருச்சி உறையூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்.
தடுப்பூசி செலுத்தி கொண்ட நான்கு நாட்களிலே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த மே மாதம் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தற்போது செல்வராஜ் இரண்டாவது தடுப்பூசி செலுத்தி கொண்டதாக அவர் பயன்படுத்தி வந்த செல்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில்
உறைந்து போகினர். செல்வராஜுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக விபரங்களுடன் வந்த குறுஞ்செய்தி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் எங்கே தவறு நடந்தது என்று விசாரணை நடைபெற்று வருகிறது.