பாக். vs நியூசி: கான்வே, வில்லியம்சன் அதிரடி., 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று.
தொடரை சமன் செய்தது நியூசிலாந்து
கராச்சியில் புதன்கிழமை நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டெவன் கான்வே மற்றும் கேன் வில்லியம்சனின் அதிரடியான ஆட்டத்தால், நியூசிலாந்து அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.
டாஸ் வென்று முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி, 261 ஓட்டங்களில் ஆல் அவுட் ஆனது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவன் கான்வே 101 ஓட்டங்கள் குவித்தார். கேப்டன் கேன் வில்லியம்சன் 85 ஓட்டங்கள் சேர்த்தார்.
Getty Images
பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 4 விக்கெட் கைப்பற்றினார். நசீம் ஷா 3 விக்கெட் எடுத்தார்.
தடுமாறிய பாகிஸ்தான்
இதையடுத்து 262 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.
துவக்க வீரர் பகார் ஜமான் ஓட்டம் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரர் இமாம் உல் ஹக் 6 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.
மூன்றாவதாக களமிறங்கிய கேப்டன் பாபர் ஆசம், அணியை சரிவில் இருந்து மீட்க கடுமையாக போராடினார். நெருக்கடிக்கு மத்தியில் அரை சதம் கடந்த அவர் தொடர்ந்து முன்னேறினார். ஆனால், முறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால் இலக்கை எட்ட முடியவில்லை. பாபர் ஆசம் 79 ஒட்டாங்க்ளில் விக்கெட்டை இழந்தார்.
ICC/Twitter
79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
43 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அணி, 182 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து தரப்பில் டிம் சவுத்தி, இஷ் சோதி தலா 2 விக்கெட் எடுத்தனர். தேவன் கான்வே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன.
மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வெள்ளிக்கிழமை (ஜனவரி 13) நடைபெறுகிறது.