2-வது டி20 போட்டி: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இலங்கை
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வியாழக்கிழமை நடைப்பற்ற இரண்டாவது டி20 போட்டியில், இலங்கை அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
செவ்வாய்கிழமை நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி, தொடரை உயிரோடு வைத்திருக்க, இன்றைய ஆட்டத்தில் வெல்ல வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கினர்.
இலங்கை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய நிசங்கா மற்றும் குசேல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடினர். 5.1 வது ஓவரிலேயே இலங்கை அணி 5 ஓட்டங்களை தொட்டது. சிறப்பாக விளையாடிய குசேல் மெண்டிஸ் 27 பந்துகளில் 50 ஓட்டங்கள் அடித்தார்.
பின்னர் 52 ஓட்டங்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ராஜபக்ச உம்ரான் மாலிக் பந்தில் கிளின் போல்ட் ஆனார்.
இதே போன்று 19 பந்துகளில் அசலாங்கா 4 சிக்சர் விளாசி 37 ஓட்டங்கள் அடித்தார். எனினும் அசலங்காவும் உம்ரான் மாலிக் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆல்ரவுண்டர் ஹசரங்காவும் உம்ரான் பந்தில் கிளின் போல்ட் ஆனார். இதன் மூலம் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை சேர்ப்பதற்குள் 138 ஓட்டங்கள் எடுத்தது.
அப்போது தனது அதிரடியை காட்டிய ஷனாகா 20 பந்துகளில் அரைசதம் எடுத்தார். கடைசி 3 ஓவரில் இலங்கை அணி 59 ரன்கள் எடுத்தது. 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 206 ஓட்டங்கள் விளாசியது.
207 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியாவுக்கு இலங்கை அணி அபாரமாக பந்துவீசி கடும் நெருக்கடி கொடுத்தது. இஷான் கிஷன் 2 ஓட்டங்களிலும், சுப்மான் கில் 5 ஓட்டங்களிலும் ராகுல் திரிபாதி 5 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
கேப்டன் ஹர்திக் பாண்டியா 12 ஓட்டங்களிலும், தீபக் ஹூடா 9 ஓட்டங்களிலும் வெளியேற, இந்திய அணி 57 ஓட்டங்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஒரு கட்டத்தில் இலங்கை அணி வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில், அக்சர் பட்டேல் சூர்யகுமார் இணைந்த அதிரடி காட்டினர். 6 சிக்சர்களை விளாசிய அக்சர் பட்டேல் 30 பந்துகளில் 65 ஓட்டங்கள் குவித்தார். இதே போன்று சூர்யகுமார் 36 பந்துகளில் 51 ஓட்டங்கள் அடித்தார். இதனால் இந்தியா மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது.
ஆனால், முக்கிய கட்டத்தில் சூர்யகுமார் ஆட்டமிழக்க, சிவம் மவியும் 2 சிக்சர், 2 பவுண்டரி விளாசி இலங்கைக்கு அதிர்ச்சி அளித்தார். எனினும் இலங்கை வீரர்கள் இந்தியா போல் நோ பால் வீசாமல் இருந்ததால், 20 ஓவர் முடிவில் இந்திய அணியால் 190 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி ஓவரில் 21 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால் இந்தியாவால் அதனை எட்ட முடியவில்லை.