சுவிட்சர்லாந்தில் கொரோனா இரண்டாம் அலைக்கு இவர்தான் காரணம்: சுகாதாரத்துறை அமைச்சர் மீது பகீர் குற்றச்சாட்டு
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை மறைத்துவிட்டதாக சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சர் மீது கடும் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலையைத் தவிர்ப்பதற்காக, கட்டுப்பாடுகளை விதிக்க பெடரல் சுகாதாரத்துறை அழைப்பு விடுப்பதைக் குறித்த அந்த ஆவணத்தை, தன் சகாக்களிடமிருந்து சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சரான Alain Berset மறைத்துவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆகத்து மாதம் 6ஆம் திகதி, சுவிஸ் பெடரல் சுகாதாரத்துறை, 12 பக்க ஆவணம் ஒன்றில், மாஸ்க் அணிதல் மற்றும் உணவகங்களை மூடுவது முதலான கட்டுப்பாடுகளை அறிவிக்குமாறு பெடரல் கவுன்சிலை வலியுறுத்தியுள்ளது.
அவை உடனடியாக அமுல்படுத்தப்படவேண்டிய நடவடிக்கைகள் என பெடரல் சுகாதாரத்துறை வலியுறுத்தியும், Berset அந்த ஆவணத்தை பெடரல் கவுன்சிலுக்கு அனுப்பவில்லை.
அந்த ஆவணம் அரசுக்கு சென்று சேராததால், அது குறித்து தெரியாமலேயே, அக்டோபர் மாதம் 1ஆம் திகதி, பலர் ஓரிடத்தில் கூடுவதற்கு தடை முதலான சில கட்டுப்பாடுகளை பெடரல் கவுன்சில் நெகிழ்த்தியுள்ளது.
அதைத் தொடர்ந்துதான் செப்டம்பரில் கொரோனாவின் இரண்டாவது அலை சுவிட்சர்லாந்தைத் தாக்கியதாக Bern தொற்றுநோயியல் நிபுணர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
சுவிஸ் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப்பிரிவுகளும் அதற்குப்பின் நிரம்பி வழிந்ததையும் நாடு கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு பரபரப்பு ஏற்பட்ட பின்னரும், Berset தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதிலேதும் அளிக்கவில்லை.