லண்டனில் பட்டப்பகலில் குத்தி கொலை செய்யப்பட்ட 39 வயது நபர்! 3 பேரை கைது செய்த பொலிசார்
லண்டனில் முடி திருத்தும் கடைக்கு வெளியே இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Choumert சாலையில், உள்ள House of Ramish 2 முடி திருத்தும் கடை முன்பு, கடந்த வெள்ளிக் கிழமை(17.12.2021) பிற்பகல் 3.15 மணிக்கு Olushola Eletu என்ற 39 வயது மதிக்கத்தக்க நபர் கத்தி குத்து காயங்களுடன் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் விரைந்த பொலிசார், காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அந்த நபர் கடந்த(18.12.2021) மாலை 6 மணிக்கு மேல் இறந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து மறுநாள்(19.12.2021) நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், வயிற்றில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
அதன் பின் பொலிசார் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில், இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக Scotland Yard பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரும், Croyden Magistrates நீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை(27.12.2021) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.