அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு ஆசைகாட்டிய கடத்தல்காரர்கள்: வெளியாகியுள்ள புதிய தகவல்கள்
கனடா அமெரிக்க எல்லையில் சடலங்களாக மீட்கப்பட்ட இந்தியர்கள் குறித்த செய்தி நினைவிருக்கலாம்.
30.3.2023 அன்று, பிரவீன் சௌத்ரி (50), அவரது மனைவியான தீக்ஷா சௌத்ரி (45), தம்பதியரின் பிள்ளைகளான விதி சௌத்ரி (23) மற்றும் மித் சௌத்ரி (20) என்னும் இந்தியர்கள், மற்றும், ரோமேனிய வம்சாவளியினரான Florin Iordache (28), Cristina Zenaida Iordache (28), அவர்களுடைய குழந்தைகள் இருவர், என எட்டு பேர் கனடா அமெரிக்க எல்லையில் சடலங்களாக மீட்கப்பட்டார்கள்.
மூன்று பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு
இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் மீது இந்திய பொலிசார் குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளார்கள்.
அவர்களில், Nikulsinh Shamaruji Vihol மற்றும் Arjunsinh Ranjitsinh Chavada ஆகியோர் இந்தியாவில் இருக்கிறார்கள். மூன்றாவது நபரான Sachin Gajendrasinh Vihol கனடாவில் இருப்பதாக கருதப்படுகிறது.
Ryan Remiorz/The Canadian Press
விடயம் என்னவென்றால், இதுவரை இவர்களில் யாரும் கைது செய்யப்படவும் இல்லை, கனடா பொலிசார் இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யவும் இல்லை.
பிரவீன் சௌத்ரியின் சகோதரர் தெரிவித்துள்ள புதிய தகவல்
இதற்கிடையில் பிரவீன் சௌத்ரியின் சகோதரரான அஷ்வின்பாய் சௌத்ரி (Ashvinbhai Chaudhary) சில புதிய தகவல்களை தெரிவித்துள்ளார்.
அதாவது, தன் சகோதரர் பிரவீன் சௌத்ரியின் குடும்பம் கனடாவுக்குச் சென்றிருந்த நிலையில், Nikulsinh Shamaruji Vihol என்பவர், 100,000 கனேடிய டொலர்கள் கொடுத்தால், பிரவீன் குடும்பத்தை தன்னால் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கமுடியும் என்று கூறியதாக தன் சகோதரர் பிரவீன் கூறியதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி பிரவீன் தன் சகோதரர் அஷ்வின்பாயிடம் பண உதவி கோர, அவர் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் வங்கிக்கடன் மூலம் பணம் திரட்டி, அதை தன் சகோதரர் கூறியபடி, Nikulsinh Vihol மற்றும் Arjunsinh Ranjitsinh Chavada ஆகியோரிடம் கொடுத்துள்ளார்.
HO-Mehsana Police/The Canadian Press
அதைத் தொடர்ந்து கனடாவிலிருக்கும் Sachin Vihol, பிரவீன் குடும்பத்தை வின்னிபெக்கிலிருந்து மனித்தோபாவுக்கு விமானத்தில் அனுப்பிவைத்துள்ளார்.
பல நாட்கள் பல இடங்கள் மாறி, கடைசியாக கார் ஒன்றில் கனடா அமெரிக்க எல்லையைக் கடக்கலாம் என கூறிவிட்டு, கடைசி நேரத்தில் குறுக்கு வழியாக ஏழு அல்லது எட்டு நிமிடத்தில், படகு ஒன்றில் ஆற்றைக்கடந்து சென்று விடலாம் என Sachin Vihol கூறியுள்ளார்.
இந்த தகவல்கள் அனைத்தையும் தன் சகோதரர் மொபைல் மூலம் தனக்குத் தெரியப்படுத்தியதாக கூறும் அஷ்வின்பாய், கடைசியில் அவர்களும் அந்த ரொமேனியக் குடும்பமும் படகில் புறப்படும்போது வானிலை மோசமாக இருந்ததால், அந்த ரொமேனியக் குடும்பம் பயணத்தை ரத்து செய்துவிடலாம் என கூறியும், இன்று புறப்படாவிட்டால், இதற்குப் பின் புறப்படுவது கஷ்டம் என்று கூறி, Sachin Vihol வற்புறுத்தி எட்டு பேரையும் படகில் ஏற்றி அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.
பின்னர், தன் அண்ணன் குடும்பம் குறித்து விசாரிக்க Nikulsinh Viholஐ மொபைலில் தொடர்புகொண்டுள்ளார் அஷ்வின்பாய். அப்போது, பிரவீன் மற்றும் அவரது குடும்பம் அமெரிக்காவுக்குள் நுழையும்போது, அவர்களை அமெரிக்க பொலிசார் கைது செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார் Nikulsinh Vihol.
அதற்குப் பிறகு அவரை மொபைலில் தொடர்புகொள்ள முடியவில்லை. ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி, தன் சகோதரர் குடும்பம் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்ட விடயத்தை தொலைக்காட்சி செய்தி மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாகத்தான் தெரிந்துகொண்டுள்ளார் அஷ்வின்பாய்!