டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி தவற விட்ட சாதனைகள் - சோகத்தில் ரசிகர்கள்
இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலியால் கடைசி வரை 3 சாதனைகளை நிகழ்த்தவே முடியவில்லை.
இந்தியா- இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று மொஹாலியில் தொடங்கவுள்ளது. இப்போட்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டியாகும்.
கடந்த 2011ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி ஆரம்ப காலங்களில் தடுமாறினாலும் பின்னர் எதிரணியினரை அச்சுறுத்தும் பேட்ஸ்மேனாக திகழ்ந்தார். சச்சினுக்கு பின் அவரின் இடத்தை நிரப்பும் அளவுக்கு மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த விராட் கோலி ரசிகர்களால் ரன் மெஷின் என்றே அழைக்கப்படுவார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் அணியின் கேப்டனாக பதவியேற்ற கோலி 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக இந்தியாவை ஜொலிக்க வைத்தார்.ஆசிய அளவில் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக விடை பெற்ற விராட் கோலியால் கடைசி வரை 3 சாதனைகளை நிகழ்த்தவே முடியவில்லை.
- டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு உயிர் கொடுக்கும் வண்ணம் கடந்த 2019ஆம் ஆண்டு வரலாற்றிலேயே முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டு பரிதாபமாக தோற்றது. இதில் லீக் சுற்றுகளில் சொந்த மண்ணில் இந்தியா ஒரு தோல்வி கூட அடையவில்லை.
- கடந்த 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்த இந்தியா 3வது போட்டியில் மனம் தளராமல் போராடி வென்றது. இதனால் உலகத்தரம் வாய்ந்த அணியாக மாறிய அதே இந்திய அணி கடந்த டிசம்பரில் தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை இழந்தது. தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் படைக்கும் என சாதனை கடைசி வரை நிகழவேயில்லை.
- கேப்டனாக பொறுப்பேற்ற பின் சிறப்பாக விளையாடிய விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த கேப்டன் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையான 41 சதங்களுடன் அந்த பதவியில் இருந்து விலகினார். இதனால் அந்த உலக சாதனையை அவரால் செய்ய முடியவில்லை.