ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் சென்னை அணி வீரர் - 3 வீரர்களுக்கு வாய்ப்பு
ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 அணிகள் பங்கேற்கும் நிலையில் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு தலா 5 அணிகள் இடம் பெற்றுள்ளன.
இதனிடையே கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை அணியின் நட்சத்திர வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகினார். இதனையடுத்து காயம் குறித்து இந்திய அணி மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவரை ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில் உடல் தகுதியை மீட்கும் முயற்சிக்காக ருத்துராஜ் கெய்க்வாட் பெங்களூருவில் உள்ள தேசிய அகாடமிக்கு புறப்பட்டு வந்துள்ளார். இங்கு அவருக்கு வலி மீண்டும் ஏற்பட்டால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் ருத்துராஜால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படலாம்.
ஏற்கனவே சென்னை அணியால் ஐபிஎல் ஏலத்தில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயம் காரணமாக விலகிய நிலையில், தற்போது ருத்துராஜூம் விலகுவதாக வெளியான தகவல் சென்னை அணி ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் கேப்டன் தோனி ருத்துராஜ் கெய்க்வாட் இடத்தில் நியூசிலாந்து வீரர் டேவான் கான்வே, அம்பத்தி ராயுடு, இளம் வீரர் சேனாபதி ஆகியோரை களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.