ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
3 சகோதரிகள் சாதனை
இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் காவலர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தேர்வில் 48 லட்சம் பேர் கலந்து கொண்டனர். கடந்த 13-ம் திகதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், 60,000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் ஜான்பூர் பகுதியை சேர்ந்த குஷ்பூ, கவிதா, சோனாலி ஆகிய 3 சகோதாரிகள் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து குஷ்பூ கூறுகையில், "என் தாத்தா ஒரு சுதந்திர போராட்ட வீரர் ஆவார். என்னுடைய தந்தைக்கு ஒரு மகனும், மூன்று பெண்களும் உள்ளனர். எங்களை எனது தந்தை மகன்களை போலவே வளர்த்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக 3 பேரும் சேர்ந்து கடின பயிற்சிகளை மேற்கொண்டோம். மைதானத்திற்கு தினமும் 10 கிமீ சைக்கிளில் சென்று கடினமான உடற்பயிற்சிகளை செய்வோம்.
நானும் சோனாலியும் ஓட்டப் பந்தய வீராங்கனைகள். கவிதா, கபடி வீராங்கனை ஆவார். நாங்கள் காவலர் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளோம். விரைவில் மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு காவலர் பணியில் இணைவோம்" என்றார்.
மேலும், பெண்களின் தந்தையான சுவாந்திரா சவுகான் கூறுகையில், "எனது மூன்று மகள்களுக்கும் சிறு வயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் இருந்தது.
மூன்று பேரும் ஒரே நேரத்தில் காவலர் பணியில் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.
இவர்களது தாயார் தேவி கூறுகையில், "என்னுடைய மூத்த மகளான குஷ்பூவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையிலும் கடினமாக உழைத்து தேர்ச்சி பெற்றுள்ளார். என்னுடைய மகனையும் காவல் துறையில் சேர்க்க விரும்புகிறேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |