7 மாதங்களில் 30 நாடுகளுக்கு பறந்த பிரித்தானிய அமைச்சர்: வலுக்கும் எதிர்ப்பு
பிரித்தானிய அமைச்சர் ஒருவர் சிவப்பு பட்டியலில் உள்ள 6 இடங்கள் உட்பட, கடந்த 7 மாதங்களில் மட்டும் 30 நாடுகள் சென்று வந்துள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலரும் அமைச்சருமான அலோக் சர்மா என்பவரே, பிரித்தானியாவில் இருந்து சர்வதேச பயணங்கள் தடை செய்யப்பட்ட நாட்களில் வெளிநாடு பயணங்கள் மேற்கொண்டவர்.
மொத்தம் 7 மாதங்களில் மட்டும் அவர் 200,000 மைல்கள் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் எந்த பயணத்தின் போதும் அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, பிரித்தானியாவால் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த வங்கதேசத்தில் இருந்து திரும்பிய அலோக் சர்மா, மாஸ்க் ஏதும் அணிந்து கொள்ளாமல் ஒரு நிகழ்ச்சியில் இளவரசர் சார்லசை சந்தித்துள்ளார்.
தற்போது தென் அமெரிக்காவில் உள்ள அமைச்சர் அலோக் சர்மா, பிரித்தானியா சிவப்பு பட்டியலில் சேத்துள்ள பிரேசில் மற்றும் பொலிவியாவுக்குச் சென்றுள்ளார். தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் சாதாரண மக்கள் 10,000 பவுண்டுகள் வரை அபராதம் செலுத்த நேரும் இந்த நிலையில், போரிஸ் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் விதிகளை மீறுவது ஏற்புடையதா என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பிப்ரவரியில் மட்டும் அமைச்சர் அலோக் சர்மா ஆபிரிக்கா, இந்தியா, நேபாளம் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள், கோஸ்டாரிகா, கட்டார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய பல இடங்களுக்குச் சென்றுள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றுள்ளார். அவர் சென்றதன் அடுத்த நாள் முதல் இந்த நாடுகளில் கொரோனா சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
மட்டுமின்றி ஜூன் மாதத்தில் துருக்கி, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கும், தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் சென்றுள்ளார் என தெரிய வந்துள்ளது.